அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டி கவிதை

அவளோடு நடை பழகிய நாட்கள் !
அவளோடு நான் பேசிய வார்த்தை !
அடம் பிடித்து அவளிடம் நான்
பெற்ற பொம்மை !

அவன் கரம் பிடித்து நான்
இரசித்த உலகம் !
அவன் தோள் அமர்ந்து நான்
அளந்த உயரம் !

அவள் சமையலில் என் கை வண்ணம் !
அவன் சாப்பாட்டில் என் சிறுநீர் !
எமிர்தம் என்று அவர்கள் சொல்ல
அடங்காத ஆனந்தத்தில் நான் !

அவனும் ! அவளும் ! நானும் !
அழகு அந்த வாழ்க்கை !
அது பொறுக்கவில்லை காலத்திற்கு !
அவர்களுக்குக் கொடுக்க நேரமில்லை எனக்கு !

அவசரமாய் எழுந்து !
அவசரமாய் கிளம்பி !
அவசரமாய் உழைத்து !
அவசரமாய் படுத்து !

அவசரத்தில் வாழ்ந்துகொண்டு
இருந்தேன் நான் !
அவர்களுக்கு சிறு சிரிப்பைக் கூட தர
முடியவில்லை என்னால் !

அப்பொழுதுதான் வந்தால் அவள் !
பொன்னகை இல்லாவிடினும் புன்னகை
பூத்த முகத்தோடு சொன்னால்
நான் தராத நேரத்தை நாம் தருவோமென்று !

அவளால் அரும்பிய மலர்
மலர்ந்தது என் வீட்டில் !
மீண்டும் அழகானது வாழ்க்கை
அவன் வரவால் !

என் வீடெல்லாம் சத்தம் நான்
பெறாத முத்தம் அவனுக்கு மட்டும் !
பொறாமையாய் இருக்கிறது என்
அன்னை மடியில் அவன் கிடக்க !

ம்ம்ம் எப்படி முடியும் என்னால்
மறுபடியும் மழலையாய் மாற !
மாறிவிட்டால் என் மனைவி
எனக்கு அன்னையாக !

என்னைக் குத்தாத மீசை
குத்திவிட்டதாம் என் மகனை !
மரண தண்டனை கொடுத்துவிட்டார்
தன் மீசைக்கு என் தந்தை !

எனக்குமட்டும் ஆசை
இருக்காதா என்ன !
ஓடிவந்து அடிக்கிறான் என் தகப்பன்
மடியில் நான் தலை வைத்தால் !

அடுத்த நொடி இடம் கிடைத்தது
என் அன்னை மடியில் !
எத்தனை ஆனந்தம் தெரியுமா
இப்படி வாழ்வதில் !

மீண்டும் நடை பழகினோம் நாங்கள் !
அவன் கரம் பிடித்து !
நான் அவனுக்கு நடை
பழக்குவதாய் நினைத்தேன் !

உண்மையில் அவன்தான் என்னை
பழக்கினான் வாழ்வை நடத்த !

நான் இழந்த நேரங்களை எனக்கு எடுத்துத்
தந்த அவனுக்கும் எனக்கும்தான் போட்டி !
இப்பொழுதெல்லாம்
யாருக்கு அதிக முத்தம் என்று !

இப்படித்தான் வாழ்கிறோம் !
அழகான எங்கள் வாழ்வை ஆனந்தமாய் !
நீங்களும் வாழ்ந்து பாருங்களேன் !
எங்களைப் போல !


----------------------------------------------
என்றும் அன்புடன்
முகில்

எழுதியவர் : முகில் (24-Aug-14, 10:14 pm)
பார்வை : 2635

மேலே