சுசீந்திரனின் -சித்திரத்தின் விலை இரண்டு கண்கள்-பகுதி1-பொள்ளாச்சி அபி
சித்திரத்தின் விலை இரண்டு கண்கள்.!-பகுதி.1-பொள்ளாச்சி அபி
------------------------ ----------------------------------- ---------------------------
குங்குமம் இல்லாத குங்குமச் சிமிழ்கள் தனக்குள் நிரப்பியிருக்கும் வெறுமையை யாரும் ரசிப்பதில்லை என்பது எந்த அளவிற்கு உண்மையோ..அதே அளவிலான உண்மைதான், கண்முன்னால் விரிந்து கிடக்கும் வரிகளில் இல்லாத கவிதையும்..!
வக்கிரங்களில் வாழ்க்கையைத் தொலைத்து,செக்குமாடுகளைப் போலக் கணிணியைச் சுற்றும் மனிதர்கள் நிறைந்த ...,இந்த பூஜ்ய பூகோளத்தினை,ஒரு பூஜ்ய அளவுகூட புரட்டிப் போடாத கவிதைகளை யாருக்குத்தான் பிடிக்கும்.?
ஆம்..பிடிக்காதுதான்.பிடிப்பதற்கு என்ன செய்யவேண்டும்..?
ஒரு கவிஞனுக்கு இங்கேதான்,உண்மையான சவால் காத்துக் கொண்டிருக்கிறது. சொல் புதிது,பொருள் புதிது என..சோதி மிக்க நவ கவிதையை படைப்பதில் கவிஞனுக்கு தளராத முயற்சிகள் வேண்டும்.படைப்பது என வந்துவிட்டால் எந்நேரமும் இதனை மனதில் கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு படைக்கப்பட்ட கவிதைகளே காலம் கடந்தும் நிற்கின்றன.
இன்றைக்கு எழுத வருபவர் யாரென்றாலும், மனதிற்குள் மகாகவி பாரதியை சுவீகரித்துக் கொள்ளாமல், கவிதையென்று எதையும் எழுதுவதில்லை.தன் கவிதையால் எங்கேனும் ஒரு இடத்திலாவது பாரதியை தொடாமலும் இருந்ததில்லை.
இவ்வாறு அவனின் பரம்பரையாக மாறிக் கொண்ட நாம்,அவனிடமிருந்து ஒன்றைக் கற்றுக் கொள்ள மறந்துவிட்டோம்.அது, அவன் பிழைப்பிற்காய் எழுதியவை எல்லாம் பிரசுரமாகியது .சமூகத்திற்காய் எழுதியதெல்லாம் சரித்திரமாகியது என்பதுதான்.! இந்தத் தெளிவு எழுத வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்தத் தெளிவுகளோடு எழுதப்பட்ட கவிதைகளை, “வலிந்து தேடியபோது.” எனக்குக் கிடைத்ததுதான் கவிஞர் சுசீந்திரன் அவர்களின் சில கவிதைகள்.
-ஏன் வலிந்து தேடவேண்டும்.? காரணத்தை கட்டுரை இறுதியில் சொல்கிறேன்.-
அவர் எழுதிய "அடிமாட்டுக் கதை.".என்றொரு கவிதை.அவருக்கு கவிதைகளைப் பிடிக்கவில்லையாம்..! கவிஞன் என்பவனுக்கு கவிதைகளைப் பிடிக்காதா..? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.தவறில்லை. அடுத்தடுத்த வரிகளில் அவருக்கு பிடிக்காத கவிதைகள் குறித்து ஒரு பட்டியல் உண்டு.
அந்த வரிசையில்,முதலில் வருவது,“களப்பணியாற்றி சாவு துடைக்காதஃ இலவு காத்த கிளிக் கவிதைகளை எனக்குப் பிடிக்கவில்லை.” என்கிறார்.
“களப்பணியாற்றி சாவு துடைக்காத கவிதை” ..எனில்,கவிதைகள் எங்கேனும் சாவு நிகழாமல் தடுக்க முடியுமா.?
இதுவொரு கவிதையா..? என்று சலித்த அனுபவத்தில்,நொந்துபோகும் மனம் அந்த நேரத்து மகிழ்ச்சியையும்,ஆர்வத்தையும் கொன்று கொள்கிறதே,அதுவொரு மரணமல்லாமல் வேறென்ன..? இந்த அனுபவம் கவிஞருக்கு பல நேரத்தில் வாய்த்திருக்கும் போலும். அந்த அனுபவம் தந்த எரிச்சலில் இந்த வரிகள் துவங்கியிருக்குமோ..? என்று பலவாறாக சிந்திக்க வைக்கிற இந்த வரிகளின் பின்னால்,சாவு துடைக்காத கவிதை ஒரு கவிதையா.? என்று கேள்வியெழுப்புவதாக இருக்கிறது.
அதே நேரம் உங்களுக்கு தெரிந்த மற்றொரு சம்பவம்..,,உப்பு சத்தியாகிரக இயக்கத்தின் போது,ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மீது கடும்கோபம் கொண்டு திரண்ட இளைஞர்களின் ஆவேசம்,காந்தி அறிவித்த அகிம்சைக் கொள்கைக்கு எதிராக கொந்தளிப்பதை அறிந்த, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை,அந்தக் கோபாவேசத்தை மட்டுப் படுத்தும் பொருட்டு, ஊர்வலத்தின்போதே பாடிய பாடல்தான்,“கத்தியின்றி,ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..”என பாடியதாகச் சொல்வார்கள்.
ஒருவேளை தனது கவிதையால்,அந்தக் கோபாவேசம் மட்டுப்படுத்தப் படாமல் போயிருந்தால்.., என்ன ஆகியிருக்கும்..? அகிம்சைக்கெதிரான வன்முறை நிகழ வாய்ப்பிருந்திருக்கும்,திருப்பூர் குமரனைப் போல,எத்தனையோ இளைஞர்கள் மரணத்தின் மடியில் தலை சாய்த்திருப்பார்கள்.!
இப்போது நினைத்துப் பாருங்கள்..களப்பணியாற்றி சாவு துடைக்காத,இலவு காத்த கிளிக் கவிதைகள் தனக்குப் பிடிக்கவில்லை என்று கவிஞர் சொல்வதில் உள்ள நியாயம் நன்கு புரியும்.!
அடுத்த வரிகளில், “வரம்பு மீறலில் வார்த்தைகள் போட்டு,விரசம் தொட்டுச் செல்லும் இந்த சிருங்காரம் பூஜ்ய பூகோளத்தின் பூஜ்ய அளவுகூட புரட்டிப் போடவில்லை..என்கிறார்.
கவிதை எதற்காக எழுதப்படுகிறது என்பதைப் பொறுத்து,அதற்கு ஒரு வரம்பு உண்டு.
ஆனால்,பெரும்பாலும் வாசிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சியை அளிப்பதின் மூலம்,தனது கவிதையின் மீதான கவனத்தைக் கவர்வதற்காக நிறையக் கவிஞர்கள்.[?],காம ரசம் என்று அழகிய பெயரிட்டு,வகுத்து வைத்திருக்கும் இலக்கணத்தைக் கடந்து,சிருங்காரத்தைக் கூட,விரசம் என்ற எல்லைக்குள் நின்று எழுதுகிறார்கள்.இருப்பதைத்தானே எழுதுகிறோம் என்று சப்பைக்கட்டு வேறு.இவர்கள் தங்கள் மனதைத் தொட்டுச் சொல்லவேண்டும்.இருப்பது அனைத்தையும் இவர்கள் எழுதித்தான் வருகிறார்களா..?என்று. இவ்வாறு இவர்கள் எழுதும்போது,வாசகன் மனதில் இவர்கள் ஏற்படுத்தும் அதிர்ச்சி எதிர்மறையாகவே இருக்கிறது குடி குடியைக் கெடுக்கும் என்று அச்சடித்த லேபிள்கள் ஒட்டப்படும் இடங்களைப் போல..! இதுபோன்ற கவிதைகளும் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லும் கவிஞர்,நீட்டும் பட்டியலில்,நடிகையின் நளினம் தொடும் கவிதைகள்,நம்மவர் வியர்வை மறந்த கவிதைகள்,கனவுச் சங்கீதத்திற்குள் இட்டுச் செல்லும் கவிதைகள்,ஆகியவையும் பிடிக்கவில்லை என்கிறார்.
திரையில் மட்டுமே ஏழைக்காக அழும் வீரதீர சாகச நாயகனின் உண்மை சொரூபங்கள்,யாரும் காணாமல் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலை,கோடியில் புரண்டாலும், அவன் அங்கமெங்கும் அவலச் சங்கிலிகள் புரண்டு கொண்டு இருப்பதாக..” கவிஞரின் கண்களுக்குத் தெரிகிறது.
அதனைக் கண்டுகொள்ளாத,லகான் போட்ட குதிரைகளைப் போல பழக்கப்பட்டுப் போன பாதைகளில் பயணிக்கும் பட்டாளத்தில் உள்ள ஒவ்வொருவனும்,தனக்குள் யோசிப்பவன் ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்த நிலையில் எழுதும் கவிதைகளும் தனக்குப் பிடிக்கவில்லை என்கிறார்.
ஒருவிதத்தில்,தனது அறிவைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்தாமல்,அது குறித்து யோசிக்கக் கூட மறந்துபோய்,காலத்தைத் தள்ளும் துதிபாடி அரசியலோடு,இந்த வரிகளை நான் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறேன்.
தனக்குப் பிடிக்காத கவிதைகளாகப் பட்டியலிட்டுச் செல்லும் இக்கவிதையின் இறுதிவரிகள், “என் செய்வேன்,இவைகளை நானும் எழுதினேன்.., நான் எதைத் தேடினேனோ அதைத் தராத
எனக்கு இந்தக் கவிதைகள் பிடிக்கவில்லை.., என்றொரு ஒரு அழகான சுயவிமர்சனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
எப்போது ஒரு மனிதன், தனது மனசாட்சிக்கு நேர்மையாக,தன்னைப்பற்றிய சுயவிமர்சனத்தை செய்து கொள்கிறானோ..அப்போதிருந்து அவனின் பாதை செப்பனிடப் படப்போகிறது. செழுமைப்படப் போகிறது என்றுதான் அர்த்தம்.
இது ஒரு வகையில்,தவறுகளை தைரியமாக ஒத்துக் கொள்பவனும்,அதிலிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் தனது பாதையை சரியான திசைவழியில் செலுத்த முனைபவனே நல்ல மனிதன்..! என்பது லெனினது கூற்று.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், தனது கவிதையின் திசைவழியை தைரியமாக அறிவிக்கிறார் கவிஞர் சுசீந்திரன்.எப்படி..?
“என்பேனாவின் மையைக் கொட்டி,வறியவர் கொட்டும் ரத்தம் நிரப்பி,எழுதப் புறப்படுகிறேன். இனியாவது என் கவிதை எளியோரைப் பாடட்டும்.இனியாவது என் கால்கள் தெருவுக்கு வந்து போராடட்டும்..!” என்று.
கவிஞர் தனக்கு முன் இருக்கும் சவால் எதுவென சரியாக இனம் கண்டுவிட்டார் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார்.
மீண்டும் இதன் அடுத்த பகுதியில் பேசுவோம்.
அன்புடன் பொள்ளாச்சி அபி.