கடைசிவரை
அன்றொரு நாள்
மழையேதுமில்லை
மலரும் தூவவில்லை
பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை
பின்னனி பாடலுமில்லை
அவளைக் காணப்போவதாய்
அசரீரி ஒலிக்கவில்லை
யாதொரு அதிசயமுமற்ற
சூழ்நிலையில்
அதிசய கலையொன்றை
கண்டேன்.
பார்த்த நொடி
பதிந்த முகம்
நீர்த்த நினைவிலும்
நிலை மாறதிருப்பதும்
ஓர் அதிசயமே!
நான் பார்த்தேன்
கடைசிவரை
நீ
உபசரித்தாய்
கனாக் கண்டிருந்த எனக்கு,
உன் கண்கள்
விசாரிக்கவில்லை
என்பது தான் தெரியவில்லை.
நான் கேட்டேன்
கடைசிவரை
நீ
பேசிய பாடல்களால்
மயங்கி இருந்த எனக்கு,
மூடிய கிளிஞ்சல்களாக இருந்த
உதடுகள் பிரிந்த
ஓசை கேட்கவில்லை.
நான் தந்தேன்
கடைசிவரை
நட்சத்திரங்கள் பூத்த
ஒரு கைப்பிடி செடியை
நாணத்தோடு
நழுவிய சிரிப்பால் அங்கீகரித்து
பெற்றுக்கொண்டாய்.
உனக்காக
உருவெடுத்த
சொற்கள் தேக்கி
விளைவித்த கவிதையை
பூவிதழ்களென விரிந்த
விரலில்
வண்டினங்களாய் வந்த காகிதங்களை
ஏந்தினாய்
பொருட்கள் நிறைந்த
பேழையின் வடிவில்.
நான் அளித்தேன்
கடைசிவரை
விளைவுகள் கொண்ட
விளை பொருளான அன்பை
மனம் விரித்து
மடி சாய்ந்து
ஏற்றுக்கொண்டாய்
நமக்காக
மாற்றியமைக்கப்பட்ட
கதைகளில்
மாற்றியமைத்த எண்ணங்களில்
கடைசிவரை
விழிகள் விலாசந்தேடவில்லை
உதடுகள் உடைந்துச்சரிக்கவில்லை
பேழை வடிவம் மாறவில்லை
கதைகளும் கதைகளாய்......