மாறிய கிராமம் மாறாத மனிதம்

ஆறாண்டு
அன்னிய தேச
வனவாசம் முடித்து
பணவாசம் பெருகி
பாசத்துடன் சொந்த
கிராமம் திரும்பியவன்
அசந்து போனான்....
மாடி கட்டிடங்கள்
நைட்டி பெண்கள்
பர்முடாஸ் ஆண்கள்
வீடு தோரும்
எமஹாக்கள்,
ஹீரோ ஹோண்டாக்கள்...
இடைபட்ட காலத்தில்
கணேசன் கணேஷாகவும்
விஸ்வநாதன் விஷ்வாவாகவும்
சந்தோஷ் சாண்டியாகவும்
மாறி இருந்தார்கள்....
பார்டர் மார்க்கில்
பாஸ் செய்தவர்களும்
மருத்துவம்,பொறியியல் படிக்கிறார்கள்
வாட்சப்பிலும்,முக நூலிலும்
புகுந்து விளையாடுகிறார்கள்....
ஆயினும் என்ன....
மாறாத சாதி வெறி
தீராத மதவெறி
இன்னும் தனியவில்லை...!
டீக்கடைகளின் டம்ளர்களிலும்
கோயில் தேரோட்டத்தின்
வடம் பிடிப்பதிலும்
தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது
சாதிய வெறி....!