சுடாத பழம் -Mano Red
என்னடா வாழ்க்கை..?
யாரோ கேட்ட கேள்வி இது,
வெற்றி மட்டும் போதாது
தோல்விக்கான நேரம் இது..!!
பூனை போன வழியில தான்
யானை போக முடியாது,
கேடு கெட்டுப் போனாலும்
பணத்தாசை நம்மை விடாது...!!
சொந்த பந்தம் எல்லாமே
நாடக கூட்டம் தான்,
பக்கத்துல வந்தாலே
எடுக்கனும் ஓட்டம் தான்..!!
புதுசு புதுசா வந்தாலும்
புடிச்ச வாழ்க்கை அமையாது,
படிச்ச படிப்பு என்னாச்சு
தெருவுல வந்து நின்னாச்சு..!!
உண்டியலில்
கள்ள நோட்டு போட்டாலும்
கடவுளுக்கு தெரியாது,
கீழே உருண்டு புரண்டாலும்
ஒட்டுற மண்ணு ஒட்டாது..!!
காலம் காட்டும் நல்ல நேரம்
அது ரொம்ப ரொம்ப தூரம்,
பாதி வாழ்க்கை சோகம்
இங்கே எல்லாம் கடந்து போகும்..!!
எவனோ பறித்து போட்ட
சுட்ட பழம் வேண்டாமே,
நாமே எட்டிப் பறிக்கும்
சுடாத பழம் வேண்டுமே..!!