போற்றிப்பாடடி கண்ணே

சுகங்களை புதைத்துவிட்டு
சோகங்களை போர்த்திக்கொண்டு
வெள்ளைக்கார துரைமார்க்கு
வெட்டியாய் வேலை செய்த காலத்தை
வெட்டி புதைத்துவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

அடி உதைகளை வாங்கி
அடிமைகளாய் வாழ்ந்து
மாடுகளாய் உழைத்து
மாண்டுப்போன காலமதை
மாய்த்துவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

சாதத்திற்கு வழியில்லாமல்
சாத்தான்களின் பிடியில் சிக்கி
செத்துப்பிழைத்து இரத்தம் வடித்து
மனம் உடைந்துபோன காலத்தை
மறந்துவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

வெடி வெடித்ததில்
அடி மடி கலங்கி
கத்திக்கதறி மூச்சுத்திணறி
கண்ணீர் வடித்த காலத்தை
மண்நீரில் கரைத்துவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

தலை விதியும்
தலைவர்களின் சதியும்
வாழ்க்கையில் மாறா வடுவாகியது
மாறா வடு தந்து வலி தந்த காலத்தை
மாற்றிவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

பஞ்சப்பட்டினியை
பார்க்க சகிக்காமல்
துள்ளி எழுந்த வேகத்தாலும்
உந்தி தள்ளிய கோபத்தாலும்
புதுப்பாதை தேடிவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

அந்நியருக்கு எதிராய்
அஹிம்சை போராட்டம்
எமக்கு தெரிந்ததே
விடியலின் வெள்ளோட்டம்
மண்ணை காப்பற்றிவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

கத்தி முனையில்
இரத்தக்கறைகள்
தோட்டாக்களுக்கு இறையான
பட்டாம்பூச்சிகளுக்கு
ஆத்துமசாந்தி தந்தோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

வேகத்திரி மூட்டி
கோபத்தீ வைத்து
வெள்ளையனை
வெள்ளை சாம்பலாக்கி
வெளியேற்றிவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

இடர்களை தீர்த்து - வாழ்வில்
சுடர்களை வார்த்து வெள்ளையனின்
தந்திரத்தில் உலக
மந்திரங்களை அறிந்து
சுரந்திரத்தை வாங்கிவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

கானகத்தே நின்று
தியானம் செய்து
தாயகத்தை காத்து
மயான பூமிதனை
பூங்காவனமாக்கிவிட்டோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

உண்மையினை புரிந்து
உள்ளமதை அறிந்து
பொய்மையை உடைத்து
மெய்மையை நாட்டி
வெற்றிபெற செய்தோமென
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

நல்லவை செய்து
நல் அவை தந்து
ஊழ்வினை அறுத்து
ஊனத்தை அழித்து
ஊரறிய வாங்கினோம் சுதந்திரமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

அடம்பன் கொடியாய்
திரண்டு மிடுக்காகி
புரண்டு போராடி
பறந்து பந்தாடி - வெள்ளையனை
மிரண்டு ஓடவிட செய்தோமென்று
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

நாடு நமக்கேதும்
செய்யாவிடில் என்ன?
நாட்டுக்காக - எம் தாய்
நாட்டிற்காக நாட்டையே காத்து
சாதித்தொமென
போற்றிப்பாடடி கண்ணே.....!!!
போற்றிப்பாடடி கண்ணே.....!!!

எழுதியவர் : ம.கலையரசி (1-Sep-14, 9:42 am)
பார்வை : 61

மேலே