நரகத்திற்கு ஒரு நடை பயணம்

இதோ இன்னொரு முறை
நான் பயணமாகின்றேன்
எனக்கான ஏகாந்தம் தேடி
பாதாளங்களின் உச்சாணிக்
கிளைக்கு....

மதுரங்களின் கசப்பிற்கும்
அமிர்தங்களின் ஆயுள்முடிவிற்கும்
இடைப்பட்ட ஒரு
தொடுகோட்டிற்கு...

எனக்காக மட்டும்
ஏன் எனக்காக??
விழி விளிம்பின்
ஓரசை சீருக்கும்
மோனைகளின் முக்காட்டு
மோகத்திற்கும் பைத்தியமாகிப்
போகும் கவிஞர்களின்
கடைசி பிம்பம்தேடிப்
போகும் பிரயாசையால்....

பலமுறை பிரசவித்தும்
என் கவிக்குழந்தைகள்
கனவுக் கால்மாட்டில்
கற்சிலைகள் ஆகிப்போவதால்!
மலட்டுக் கவிஞன்
புனைபெயர் தேட
வேண்டிய நிர்பந்தத்தால்....

சுவனங்களின் சுடுகாட்டில்
சில்லறைச் சொத்துகள்
பாத்தியமாகி போனதால்
நரகங்களின் நந்தவனம்
நாடி நலம்பெற
போகிறேன்....

வாழ்த்துகளின் வசந்தங்கள்
என்னை வாதைகளின்
கூடாரத்தில் சிறைவைத்ததால்
வசவுகளின் வண்ணம்
தேடி கும்மிருட்டு
குகைக்குள் நுழைகிறேன்....

உன் கேலிச்சிரிப்பில்
எனக்கொரு கைவிளக்கு
செய்து! குருதிக்
குழம்பில் திரியிட்டு....

வந்ததும் சொல்கிறேன் நரகத்தின்
நாட்குறிப்புகளை!! சதைத்துனுக்கு
அட்டைகளை பிய்த்தெறிந்து
சரளமாக சஞ்சரிக்கும்
தைரியம் உனக்கிருந்தால்.....

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (2-Sep-14, 3:49 pm)
பார்வை : 209

மேலே