கவனிப்பாரற்று சில கவிதைகள்

தான் கழித்த சிறுநீரில்
புரண்டோடி விளையாண்டு
மண்ணாடையை உடுத்திகொள்ளும்
அம்மணமாய் திரிந்த
ஏழை குழந்தை..!

ருதுவாகிவிட்ட கணமொன்றில்
வழிந்தோடும் குருதியோடும்,
கலங்கிய கண்களோடும்
தாய் அருகில் நின்றிருக்க,
'எதை துடைப்பாள் முதலில்..?'என
பார்த்திருக்கும் மலரின் விழிகள்..!

ஆட்களற்ற பொழுதொன்றில்,
நிகழ்ந்துவிட்ட விபத்தொன்றில்
உயிர் பிரியும் தருவாயில்
தன் அருகே
கரையும் காகங்களாய்
உறவுகளாய் கண்ட
உண்மை உறைந்த கண்கள்..!

முதலிரவொன்றில் 'சப்தமிடுமெனெ'
பழங்கால கட்டிலின்
கால்களுக்கு,
தலையணையிடும் கணவனை கண்டு
அன்னிசையாய் ஏறி இறங்கும்
மனைவியின் தொண்டைக்குழி..!

இடுப்போரம் அமர்ந்திருக்கும்
இரண்டு வயது வாண்டிர்கு
உணவு தர
"ஆ காட்டு ஆ காட்டு "என
ஆ காட்டும் அம்மாவின் முகம்..!!

எழுதியவர் : கல்கிஷ் (3-Sep-14, 2:25 pm)
பார்வை : 106

மேலே