எழுத்து இன்னும் வேண்டுமா

எழுத்து மட்டும் வேண்டுமா இனி..?
மனிதனும் மனிதனும்
இதயப்பரிமாற்றம்-இதழ்வழி...
எழுத்துவழி...???
நான் பேசமட்டும் தெரிந்துக்கொள்கிறேன் அம்மா..
எழுதும்போதுதான் மறைகிறது மனிதம் ...
அதிகார வலைவீச்சில்
ஆன்மா நொடிந்துப்போக
விரல்களின் நிமிர்தல்...எழுதிட...
அம்மா நான் எழுதிட மட்டும் வேண்டுமா?

எழுத்துக்களின்,
இடுக்குகளில்,வளைவுகளில்,புள்ளிகளில்
தாராளமாய் உள்ளன
ஏராள ஏமாற்றுத்தனங்கள்....
நிறைய ஏமாற்றத்தெரிந்தவன்
படிக்கிறான் எழுத்தை கொஞ்சமாவது
நிறைய எழுத்தறிந்தவன்
ஏமாற்றுவதையே வாழ்வாக்கிக்கொள்கிறான்...

நொடிகளையும் ஆண்டுகளையும்
வயல்களிலேயே வாழ்வாக்கிக் கழித்த
என் அப்பனும் அப்பாத்தாவும்
போலவே
அம்மா நீயும் அத்தையும்!!
தொப்பை முதலாளி பரம்பரை மட்டும்
அதிகாரத்தை விதைத்து
வாழ்க்கையை அறுவடை செய்ய
அறிந்துக்கொண்டனர் எழுத்தை ..
செயல்முறை எதுவும் அறியாமலே...
என்னை ஏன் அம்மா உள்ளே அனுப்பினாய்
எழுத்தை மட்டும் அறிய....??

உள்ளே தலைதிரும்பி பார்க்கத் தடை..
சிலைகளாய் நானும்
என் இனத்து பலரும்..
பிரம்பான கைகள்
குட்டும் மோதிரங்கள்
விஷ அம்பான வசவுகள்
மிரட்டும் கண் உருண்டைகள்
ஒழுக்கம் எனும் பெயரில் அடிமைத்தனம்
எனக்கும் என் இனத்தார்க்கும்
எழுத்து மட்டும் தானம்மா உள்ளே
வேண்டுமாம்மா???

வெளியே அணில்களின்
தனி ஆவர்த்தனம்
காகங்களுக்கு எப்போதும்
திசம்பர் மாதம்
மார்கழியை தாங்கிய
புல்வெளியில் உலாவும் தும்பிகள்
வாழ்க்கையாய் வாழைத்தோப்பு வெளியே..
கந்தகக் குழம்பில் மூழ்குவது
விரல்கள் மட்டுமே வெளியே
ஆனால்
உள்ளே உள்ளமும் மூளையும் தான்..
வெ(வே)ற்று எழுத்துக்கள்
வேண்டுமா அம்மா??
செயல்முறை இல்லா
எழுத்தால் என்ன பயன் அம்மா??

செயல்முறை நமக்கு
வாழ்வின் ஓர் அங்கம் -அதனுடன்
எழுத்து இணைந்தால் நமது
முன்னேற்றம் முழுவீச்சில்
அதிகார வர்க்கம் அறிந்துவைத்துள்ளது
வசிக்கவும் வாசிக்கவும்
செயல்முறையும் அனுபவமும்
போதும் அம்மா...
எழுத்து மட்டும் இனி போதாது அம்மா

யோசி ,அம்மா யோசி

எழுதியவர் : அகன் (4-Sep-14, 8:29 pm)
பார்வை : 98

மேலே