முதல் சந்திப்பில்-நீ யாரோ நான் யாரோ

கண் கூசும் சூரியனும்..
உன் பார்வைக்கு இணையாகுமா..
இதுவரை உன் விழிகளை..
நான் பார்த்ததே இல்லை...!

புத்தியை குழப்பிவிடும் கணக்கும்..
உன் பேச்சுக்கு இணையாகுமா..
இதுவரை உன் வார்த்தைகள்..
எனக்கு புரிந்ததே இல்லை...!

நீரால் அணையும் நெருப்பும்..
உன் கண்ணியத்திற்கு இணையாகுமா..
இதுவரை உன் மூச்சும்..
என்னை தீண்டியதே இல்லை...!

தரையில் துடிக்கும் மீனும்..
உன் தவிப்பிற்கு இணையாகுமா..
இதுவரை உன் உதடுகள்..
என்னை அழைக்காதிருந்ததே இல்லை...!

ஏதுமறியா சிறு பிள்ளையும்..
உன் வெகுளி தனத்திற்கு இணையாகுமா..
இதுவரை உன் தவறுகளை..
என்னிடம் மறைக்க தெரிந்ததே இல்லை...!

உனக்கு இணையென..
எதை சொல்ல..
யாரை சொல்ல..

கற்பனையில் வளர்ந்ததாலோ..
தெளிவில்லா கருமை உனதானது...!

கனவிலேயே தொலைத்துவிடவும் விருப்பமில்லை-நீயின்றி
வேறுலகில் தொலைந்துவிடவும் விருப்பமில்லை...!

முகமறியா முதல் சந்திப்பில்..
நீ யாரோ.. நான் யாரோ...
இருப்பினும் ஓர் உணர்வு உற்சாகம் கொள்ளும்..
நீ தான் "அவனென்று....!"

அந்த கருமை வெளுத்திருக்கும்...
"மாப்பிள்ளையாக..."
நானே வெட்கத்தில் சிவக்கும்படி...

எழுதியவர் : மணிமேகலை (4-Sep-14, 8:24 pm)
பார்வை : 438

மேலே