முதுவேனில் காலம்
நம் நெருக்கம் குறைக்கும்
பிரிவின் காலம்
சுருங்கிக்குன்றிக் குறையலாம்.
எத்தனை பேர் நடுவிலும்
உன் கண்கள் என்னைத்தேடலாம்.
அடுத்தவர் கை மணம் ருசிக்கும் போதும்
உன் நாசியிலே
என் ரசத்தின் வாசம் வீசலாம்.
நான் சொல்ல நினைத்துவருவதை
நீ என்னை முந்திச் சொல்லலாம்.
எப்போதோ நான் சொல்லி வைத்த ஆசைகளை
நீ நினைவில் வைத்து நிறைவேற்றலாம்.
என் அசைவு கண்டேநீ எனது
மனமொழியை அறியலாம்.
உன் வாழ்வில் என் அவசியம்
மிக அதிகம் என நீ உணரலாம்.
எனக்கு சிறுவலி என்ற போதும்
நீ துடித்துப்போய்த் துவளலாம் .
கடமைகள் முடிவடையும் போது
உன் உடமை நான் மட்டும் என்றாகலாம்.
என் மேல் எல்லை கடந்து உனக்கு
அன்புப்பெருகிப் பொங்கலாம்.
மறுபிறவியிலும் இவளே வேண்டும்
என இறையிடம் நீ வேண்டலாம்.
திருமணம் காதலில் முடியும் விந்தை
சந்தடியின்றி நிகழலாம்.
பாந்தமாக இளமை துரத்தி
பிந்தை வரும் முதுமைதனில்
நம் அன்பு எனும் மலர்ச்செடி
கிளைபரப்பித் தருவாகலாம்.