சுடும் ஜனநாயகம்
உரிமைகளை ஊன்றுகோலாய் கொண்டு
உருப்பெற்றது இந்த ஜனநாயகம்.....!
பிச்சை பாத்திரம் ஏந்தி
மக்கள் மன்றாடியும்
மறுக்கப்படுகிறது அது.....!
திரும்ப திரும்ப தட்டியும்
திறக்கப்படா கதவுக்குள்
பூட்டிட்டுக்கொண்டது அது ....!
அநியாயக்காரர்களின்
அடக்குமுறைக்கான
ஆயுதமாய் இன்று அது.....!
குருதி ஆறு ஓடலில்
குலப்பெருமை ஓங்கும் எனும்
குதர்க்கவாதிகளின் கையில்
குத்திக்கரணம் போடுகிறதாம் அது.....!
முட்டாள் சமுதாயம்
முகத்தை மண்ணில் புதைத்ததால்
முறை தவறி போனது அது..........!
சுறுசுறுப்பற்ற சமுதாயத்தால்
சுதாகரித்த அரசியல்
சுற்றும் முற்றும்- அதன்
சுதந்திரத்தை சுருக்கிற்று...!
ஓட்டு போட்டு ஓட்டு போட்டு
ஓயாத பொது மக்கள்
ஓசியாய் கிடைக்குமென எண்ணிய
ஒரே ஒரு பொருள் அது....!
அரசியல் மேடைகளில்
ஆங்காங்கே வந்து
ஆட்டையை கிளப்புகிறது அது...!
"ஜனநாயகம் வாழ்க
ஜனநாயகம் வெல்க"
என கொந்தளித்த கூட்டமொன்றில்
ஒரே கோலாகலம்...!
வெடிக்கிறது மறு கணம்
"படீர்" என துப்பாக்கி.
சற்றே மாறுபட்டு மறுபடியும்
கேட்கிறது அந்த கோஷம்
"சுடும் ஜனநாயகம் வாழ்க"
ஆம்
"சுடும் ஜனநாயகம் வாழ்க
மனித சுதந்திரமே நீ வீழ்க"