அடை பாயாசம்
ஓணம் என்றால் நினைவுக்கு வருவது.... அத்தபூக்களம், ஓணஊஞ்சால், மஞ்சள் கோடி, ஓணசத்யா என்று சொல்லப்படும் கேரளவகை பாரம்பரிய உணவு அதிலும் உணவில் முக்கியமாக அடப்பிரதமன் என்று என்று அழைக்கப்படும் அடைப்பாயாசம் இன்று உங்களுக்கு எப்படி அடைப்பாயாசம் செய்வது என்று சொல்லித் தருகிறேன் ..................
தேவையான பொருட்கள்:
அடை : 1/2 கிலோ
சர்க்கரை அல்லது சீனி : அரை கிலோ ( காய்ச்சி வடிகட்டவும்)
பெரிய தேங்காய் ஒன்று அல்லது தேங்காய் பால் ஒரு லிட்டர்
ஜவ்வரிசி : நூறு கிராம்
ஏலக்காய் : சிறிதளவு
நெய் : தேவைக்கேற்ப
முந்திரிப்பருப்பு : நூறு கிராம்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை) : நூறு கிராம்
தேங்காய் சிறிதாக அரிந்தது : சிறிதளவு
அகன்ற பாத்திரம் 2
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் ஜவ்வரிசியை வேக வைக்கவும், இன்னொரு பாத்திரத்தில் அடையை சிறிது பொடித்து நன்றாக வேக வைக்கவும்! (அடை வெந்துவிட்டதை தெரிந்து கொள்ள அடை வெந்தவுடன் சேமியா மாதிரி வளைந்து கொடுக்கும்) தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து மூன்று முறை பால் பிழிந்து மூன்று பாலையும் தனி தனி பாத்திரத்தில் வைக்கவும். அடை வெந்த வுடன் சல்லடை போன்ற துவாரமுள்ள பாத்திரத்தில் கொட்டி வடிகட்டவும் ( சல்லடைபாத்திரத்தை இடுக்கி கொண்டு பிடியுங்கள் இல்லையேல் கை சுடும்) தண்ணீர் வடியுமுன்னே குழாயை திறந்து அடை வைத்திருக்கும் பாத்திரத்தைக் காண்பித்து ஒரு கரண்டி கொண்டு கிளறி கொடுத்து அடையை நன்றாக கழுவும் கழுவிய அடையை உடனே ஜவ்வரிசி வெந்து கொண்டிருக்கும் பாத்திரத்திலிட்டு மறுபடியும் வேக விடுங்கள்! ( அடையை உடனே ஜவ்வரிசியுடன் போடாவிடில் அடை கெட்டியாகி விடும்)
அடையும் ஜவ்வரிசியும் நன்றாக வெந்தவுடன் அதனுடன் சீனி அல்லது மண்டை வெல்லப் பாகு சேர்க்கவும். வெல்லப் பாகு நன்கு கொதித்து கலந்தவுடன் அதனுடன் மூன்றாவது தேங்காய் பாலை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு சிறிதளவு வற்றவிடவும்!
சிறிது வற்றியவுடன் அதனுடன் இரண்டாவாது பிழிந்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிடவும்! அதுவும் கொதித்து சிறிது வற்றியவுடன் முதல் முறை பிழிந்தெடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்! (கவரில் வாங்கிய பால் எனில் அப்படியே ஊற்றி கொதிக்க விடலாம்) அதனுடன் ஏலக்காயை நன்கு பொடித்து சேருங்கள்!நன்றாய் கொதித்து இசாக எண்ணெய் படர்ந்தது போல் காட்சியளிக்கும் போது இறக்கி விடுங்கள்! கொதிக்க விடும் பொழுது மறவாமல் தீயின் அளவைக் குறைத்து வையுங்கள்! அடிபிடிக்காமல் கரண்டியால் அடிக்கடி கிளறிக் கொடுங்கள்!
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்றி அதில் சிறிதாக அரிந்த தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து அடைப் பாயாசத்துடன் சேர்க்கவும்! அதுபோல் முந்திரிப் பருப்பையும் வறுத்து சேர்க்கவும்! கிஸ்மிஸ் பழத்தை அப்படியே போடவும் அதை நெய்யில் வறுக்கவேண்டாம் !
என்ன? அடைப்பாயாசம் செய்ய கற்றுக் கொண்டாகிவிட்டதா? எங்க வீட்ல நாளை அடை பாயாசம் அப்ப உங்க வீட்ல....................??????
.......................சஹானா தாஸ்