கரங்கள் தந்தாய் நீ

சாயங்கள் வெளுத்துப் போன
வண்ணத்துப் பூச்சியின்
கடைசி சிறகு
பூக்கள் உரசி வானவில்லில்
உயிர்த்தெழும்போது
பிறந்திருப்பாய் நீ

உடைந்து வீழ்ந்த
எரி நட்சத்திரத்தின்
மீந்த வெளிச்சத்துளியை
காற்று அணைத்துக்கொண்ட
எரியும் வேளையில்
சுடர் விட்டது நீ

சாம்பல் துடைத்த
அனல் வளி கண்டிட்ட
செந்தீக்கங்குகளில்
பளிச்சிடும் சிறு பொறி நீ

விழுகின்ற மழைத்துளியை
மடி ஏந்திக்கொண்ட
இதழ்களின் கனம் நீ

மெய்மைகள் மடமையாகி
பொய்மை துளிர்க்கும்போது
வேரறுக்க வைக்கும்
கூர்முனை நீ

மனதில் உறுதியாய் வீற்று
கைகளில் எதிர்காலம்
தந்தது நீ

நாளை வாசனைக்காக
பூக்கள் மரித்துப்போனாலும்

திசை தேடும் காற்று
திறந்தவெளியில் தொலைந்துபோனாலும்

மெய் ஊன்றி நிற்கும்
கணப் பொழுதுகளில்

எது எப்படி நடந்தாலும்
எங்கிருந்தோ வாழ்வளிக்க
புதுப் புது விடியல்களைப்
பிரசவித்துக் கொண்டிருக்கிறது
நம்பிக்கை மட்டும்!!

எழுதியவர் : கார்த்திகா AK (6-Sep-14, 8:46 pm)
பார்வை : 122

மேலே