ஆசாரம் எப்பெற்றி யானும் படும் - ஆசாரக் கோவை 96

நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை யென்றிவைபோல்
தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்
அப்பெற்றி யாக முயல்பவர்க் காசாரம்
எப்பெற்றி யானும் படும். 96 ஆசாரக் கோவை

பொருளுரை:

ஆக்கமுள்ள எறும்பு, தூக்கணங்குருவி, காக்கை என்றவைகளின் செய்கை போல
நல்லவனாக தம் கருமத்தை சோம்பலில்லாமல் செய்து வந்து, தம் கருமத்தை
அம்மூன்றின் தன்மை போல் முயன்று செய்பவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம்
எத்தன்மையானும் கிடைக்கப் பெற்று சிறப்புறுவர்.

பொழிப்புரை:

ஆக்கமுள்ள எறும்பும், தூக்கணம் பறவையும், காக்கையும் என்று சொல்லப்பட்ட
இவைகளின் செய்கை போல நல்லனவாகிய தங் கருமத்தைச் சோராமற் கொண்டு,
கிடையாத காலத்திற்கு உதவக்கிடைத்த காலத்தில் உணவிற்குரியவற்றைச்
சேர்த்தலும், குளிர் காற்று முதலியவற்றால் இடையூறு ஏற்படாத வகையாக
இல்லம் இயற்றிக்கொள்ளுதலும், சுற்றத்தாரை விளித்து உண்பதுவுமாகிய
இக் கருமங்களைச் செய்பவர்க்கு இல்வாழ்க்கையின் ஒழுக்கம் எத்தன்மையானும்
சிறப்புறும்.

நந்தல் - பெருகுதல், நந்து எறும்பு - ஆக்கம் பெருகிய எறும்பு. இவற்றிற்கு ஆக்கம்
தத்தம் கருமத்தை நன்றாகச் செய்தல்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Sep-14, 3:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 184

மேலே