சொல்ல முடியா வாழ்த்து
பிறந்த நாள் வாழ்த்துகள்!
காற்றலைகளில்-
ஒலியனுக்களில்-
எனைச் சுற்றி
இருப்பாய் நீயென
சொல்கிறேன் உனக்கு
பிறந்த நாள் வாழ்த்து!
உணர்வுகளில் ஊடுருவி
ஆர்ப்பாட்டங்களின் அரவமில்லாமல்
ஏதோவொரு கடையில்
காத்துக் கிடக்கிறது....
இன்னும் வாங்கப்படாத
அந்தக் 'கேக்'.
நல்விருந்தை எதிர்நோக்கிய நண்பர்கள்
நாவிலூறிய நீரை
இடம்பெயர்க்கின்றனர்...
விழிகளுக்கு!
இல்லையென்று நீ போனதும்
இல்லத்தையும் உள்ளத்தையும
அலங்கரித்த உறவுகள்,
செய்வதறியாது விழிக்கிறோம்....
காலண்டரில் கிழிக்கப்பட்ட
இந்த நாளைக் கையிலேந்தியபடி!
உனது இறுதி ஊர்வலத்தில்
சிந்தப்பட்ட மலர்மிதித்து
கீச்சொலியெழுப்பிய
உன் மகளின்
செருப்பொலியில் சிரிக்கிறாய் நீ!
கைகுலுக்க முயல்கிறேன் நான்!
பேசிப்போன வார்த்தைகளாலும்
விட்டுச்சென்ற நினைவுகளாலும்
எரிகிறாய் நீ...
சமாதியில் மெழுகுகளென!
கட்டியணைக்க முயல்கிறேன் நான்!
இறுதியில்,
உன் நிலைத்த பார்வையும்
அசையா அங்கமும்
அறிவுறுத்திப் போகின்றன...
வாழ்வுக்கான அர்த்தங்களை!
உனதிருப்பின் இனிமையை
மீட்கொணர முடியாமலும்-
உனதிழப்பின் வலியை
சகிக்க இயலாமலும்-
மறக்கவே நினைக்கிறேன்....
உன் பிறப்பையும் இறப்பையும்!
காற்றலையாய்-
ஒலியனுவாய்-
இருப்பின் ஏதோவொரு வடிவாய்
இருப்பாய் நீயென
சொல்கிறேன் உனக்கு...
பிறந்த நாள் வாழ்த்து!