வருங்காலக் கிரகம் நீ
உதிர்ந்து கிடக்கும்
ஒற்றைச் சருகினோரம்
துக்கத்தில்
எழில் கரையும்
இயற்கையின் ஒப்பாரி
இரைகின்ற அருவிக்கு
இதுவே
நவீன ஓவியம் ......
அச்சத்தின் திருகுக்குள்
இங்கே
கோலப் புள்ளிகளின்
துணிச்சலாய்
தரை தேடுகின்ற
தன்மானக் கூர் முடிச்சுகள்
வண்ணப் பொடியின்
பகட்டலுக்கு
அவிழும் - வெண்ணிற
ஆடைகள் ….
கதவுகள் என்பது
வானத்தின் மறுமலர்ச்சி ;
பறவைகளுக்குப்
பழகாத புதுமொழி ;
சுதந்திர வட்டம்
சூட்டுக்கோல் விட்டம் ;
கவிகளல்ல
எங்கும்
கட்டுமரங்கள்
இது மீன்களற்ற
வலை - பசியாறக்
காத்திருக்கும் கடலொன்றின்
தொலைந்த தவம்...
பெருங்கூடு செய்
வரமாகு
உமது எழுத்துக்கள்
ரீங்காரமிடும்
மௌன ராகமிதில்
கூவும் காலையோன்றின்
சேவலாய்
அடையட்டும்
புலராத புவியின்
உறக்கம் ….......!
இரு துருவங்களின்
மையம் நீ
மீசை சுழற்றும்
காந்த ஊசி …
பெயரிடாப்
பிள்ளையொன்றின்
வருங்காலக் கிரகம்
பாரதி ! - நானுமோர்
தொடக்கம் மட்டும் ;
இன்னும் தேடு
இனி காடுகளில்லை
விதைக்க ,
இயந்திரக் கோளாறில்
இடைநிற்கும்
சந்தர்ப்பம் …....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
