நான் கவிஞனாகினேன் ---------- கே-எஸ்-கலை

மகளென உறவொன்றுப் பெற்று – யான்
மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன் !
அகமெல்லாம் ஆயிரம் கோடி – மின்னல்
அடிப்பதை உணர்வால் பார்க்கிறேன் !

பூக்களில் என்ன அழகிருக்கு ? – சொற்
பாக்களில் என்னடா அழகிருக்கு ?
தேவதை எந்தன் மடியிருக்க – அந்த
தேனிலும் எங்கடா இனிப்பிருக்கு ?

அகத்தின் ஆசையைப் பெருக்கி – இந்த
ஜகத்தினில் திமிராய் நடக்கிறேன் !
முகத்தினில் மீசையை முறுக்கி – நான்
சுகத்தினில் சுழன்றுத் துடிக்கிறேன் !

சொற்களைத் தேடி அலைகிறேன்- புதுச்
சொர்க்கத்தை நேரினில் காண்கிறேன் !
கற்பனைத் தாண்டிய அழகினில் – ஒரு
கவிதையை எழுதிப் பறக்கிறேன் !

தமிழன் பாரதி நினைவுதினம்- இவன்
தரணியில் பாவலன் ஆகிறேன் !
பாரதி தோற்றிடும் கவிதையை – இந்தப்
பாருக்குத் தந்து குதிக்கிறேன்...!
=====================
(செப்டெம்பர் 11ம் திகதி நான் தந்தையாகினேன். இந்த வரத்தை எனக்கு தந்த என் அன்பு மனைவி ஹேயந்தினி பிரியாவை நினைத்து நினைத்துப் பெருமைப் படுகிறேன். பிரசவ வலியின் இடையிலும் கூட கணவன் முகம் பார்த்து குறும்பாய் சிரித்த மனைவியை இந்த ஜகத்தினில் யாருமே பெற்றிருக்க மாட்டார்கள். நான் பெரும் பாக்கியசாலி என்பதை அறிந்துக் கொண்டேன் !)
=====================
உலகின் பெருவலி தாங்கி – மகளெனும்
உறவினை தந்த என்தேவி
உடலுடன் உணர்வுள்ள வரைக்கும் – என்
உயிரினில் நீ சமப்பாதி !

எழுதியவர் : கே.எஸ்.கலை (13-Sep-14, 10:55 am)
பார்வை : 466

மேலே