கடற்கரை
நீண்ட பரந்த கடற்கரை
மணலிலே மக்கள் வெள்ளம்
சிறுவர் கூட்டம் விளையாட்டு
நசையுநர் வட்டம் ஒரு பக்கம்
மாலை வராதா வெளியே செல்வோமா
நம் மக்களைப் பார்போமா
என்னும் முதியவர் கூட்டம்
அதன் வட்ட மேஜை உரையாடல்
கையைக் கோர்த்து அருகு நடந்து
காதல் கதை பேசும் இளங்காதலர்கள்
என்று மணப்போம் தடைகள் நீங்குமோ
என்றுப் பதறும் உள்ளங்கள்
இன்று முழுதும் விற்குமோ
நம் வீட்டில் அடுப்பு எரியுமோ
என்று எண்ணி அலையும்
சிறு பண்ட விற்பனையாளர்கள்
மணக்கும் மலர்கள் கோர்த்து
பந்து என அடுக்கி
கூவி அழைத்து பரிந்து
மலர் விற்கும் மாதர்கள்
இன்று வித்தை நடக்குமோ
நம் ஆட்டம் கட்டுமோ
சில்லறை பெட்டி நிறையுமோ
இல்லை காவலர் தொல்லைதான் வருமோ
என்றஞ்சும் கழைக் கூத்தாடிகள்
நடந்து நடந்து ஆரோக்கியம் வராதா
தேக வாகு குறையாதா
இளமை திரும்பாதா
என்று எண்ணும் மாந்தர்கள்
கால் சறுக்கு பழகும் சிறுவர்கள்
சறுக்கு வட்டம் சுற்றி பெற்றோர்கள்
பெரிய போட்டி வெல்வானா
பிற் காலத்தில் பெயர் பெறுவானா
என்ற எண்ணச் சுழற்சிகள்
இளைப்பாற வரும் இடத்தையும்
விட்டு வைக்கவில்லை
துண்டுப் பிரசுரம் வினியோகம் செய்யும்
மதம் பெருக்கிடும் மத போதகர்கள்
நான் விழப் போகிறேன்
சீக்கிரம் வீடு போய் சேருங்கள்
அமைதியாக உறங்குங்கள்
என்று அறிவித்தது இரவி
எத்தனை மனக் கோட்டைகள்
எத்தனை எதிர்பார்ப்புகள்
எத்தனைக் கனவுகள் என்றே மலைத்திட்டான்
பூஜ்ஜியத்தை ஆளும் ஆண்டவன்