அப்பாயணம்- 4 க்ரைம் தொடர்

முன் கதைச் சுருக்கம்
(நான்- சௌதாமினி. சாவின் விளிம்பில் நிற்பவள். என் அப்பாவை இப்போதுதான் புரிந்து கொண்டேன். .. )

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து பாட்டி சொல்ல சொல்ல கேட்காமல் குளித்து பக்கத்து கோயிலுக்கு சென்று வந்தேன். அப்பா தோட்டத்தில் புடலைக்கு பந்தல் போட்டு கொண்டிருந்தார். சாய்ஜெகன் நிறுவனத்தின் பிசியான மேலாளர்; வேட்டியை மடித்துக் கொண்டு தோட்ட வேலை பார்க்கிறார்!

அப்பாவை அப்பாவாகப் பார்க்காமல் வெறுமனே ஆண்மகனாகப் பார்த்தேன். வெள்ளிக் கலசம் போல் தேகம். குதிரையின் லாவகமும் சிங்கத்தின் கம்பீரமும் இணைந்த உடல் அசைவுகள். அதற்கு மேல் பார்க்க பயம்மாக இருந்தது. ‘‘சைட் அடிச்சது போதும், வா’’ என்று கூப்பிட்டு விடுவார்!

ஒரே இரவில் மாற்றி விட்டாரே! என் ஈகோ தடுத்தது. இவரா மாற்றினார்? மாற்றியது கல்லீரல் கான்சராக்கும்.

பாட்டி எதிர்பட்டார். பூஜையறையை சுத்தப்படுத்தி விட்டு வருகிறார் போலும். புடவை மடிப்பிலும் கை நகங்களிலும் விபூதி தீற்றல். ‘‘சௌதாமினி, உங்கப்பா ராத்திரி முழுக்க தூங்கல. செல்லு, கம்யூட்டர் எல்லாம் வச்சிகிட்டு நிறைய பேர் கிட்ட வாய் ஓயாம பேசிட்டிருந்தார். நீ இந்த நிலையில இங்க இருக்க வேண்டாம். உங்க அப்பா கூட மெட்ராஸ் போயிடு.’’

நான் சிந்தித்தேன். இல்லினாய் யூனிவர்சிட்டி நுழைவுத் தேர்வு மூன்று நாட்களில் வந்து விடும். தேர்வு மையம் திருவனந்தபுரத்தில் அமையும். காது மூக்கில் ரத்தம் வடிவதும் மூன்று நாட்களில் வந்து விடும். இதற்கு மெட்ராஸ் போய் ஏன் அலைய வேண்டும்?

பாட்டி துளசி தீர்த்தத்தில் தேன் கலந்து கொடுத்தார். குடித்து விட்டு முற்றத்தை பார்த்து நடந்தேன். அப்பா அங்கே நின்றிருந்தார். மஞ்சள் பார்டர் போட்ட வெள்ளைப் புடவை கட்டியிருந்தேன். தலையில் கனகாம்பரம், நெற்றியில் சந்தனப்பொட்டு. அப்பா அள்ளி விழுங்கி விடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு காப்பர் கம்பியை கண் வழியாக இதயத்தில் நுழைத்த பிறகு மெதுவ்...வாக இழுப்பது மாதிரி ஒரு சிலிர்ப்பு உடம்புக்குள் ஓடியது. ‘‘வா’’ என்கிற பாவனையில் தலையசைத்தார். கால்கள் தயங்கி பின்னலிட்டன. என்னை அறியாமல் அப்படியே போய் காலில் விழுந்தேன்.

‘‘தீர்க்காயுசோட இரு’’ சட்டென்று வந்து விழுந்தன வார்த்தைகள்.
தெரிந்து சொல்கிறாரா? தெரியாமல் சொல்கிறாரா? எழுந்து விட்டேன். ‘‘ஸா...ஸாரிப்பா,’’ தரையைப் பார்த்து சொன்னேன்.

அப்பா புன்னகைத்தார்.

‘‘அப்படியே உங்க அம்மா உருவம்,’’ ஒரே சமயத்தில் நிகழ் காலத்திலும் கடந்த காலத்திலும் இருந்து கொண்டு பேசினார் அப்பா. ‘‘மற்றபடி உன் எண்ணம், சொல் செயல் எல்லாமே என்னை மாதிரி; என்னை மாதிரியே சொந்தக் காலில் நிற்கிற வெறி, லட்சியம், தைரியம், ஆத்திரம்; அவசரம்.. என் ஜெராக்ஸ் நீ. நீ நடந்து வர்ற போது அச்சு அசலா நான் வர்ற மாதிரியே இருக்கு!’’

கடைசி வாக்கியம் பாராட்டா, கிண்டலா தெரியவில்லை. இவர் நான் ‘போற வரைக்கும்’ இங்கேயா இருக்கப் போறார்?

அடுத்த மூன்று நாட்கள் நல்லபடி கழிந்தது! அப்பாவின் ஆசிர்வாதம் கான்சருக்கும் புரியும் போலும். தலைவலியும் குளிர் காய்ச்சலும் ஓரளவுதான் படுத்தியது. சாப்பாடு இறங்க வில்லை. நீராகாரம்தான். நானும் அப்பாவும் சியர்ஸ் செய்து கீழாநெல்லி கசாயம் குடித்தோம். மொட்டை மாடியில் உட்கார்ந்து உருமாறுகிற மேகங்களை வைத்து அப்பா கற்பனை கதை சொன்னார். கம்பெனி பற்றி சொன்னார். கம்பெனியை நம்பி நாலாயிரம் குடும்பம் இருக்கிறதாம். முந்தாநாள் டெல்லியில் நடந்த முக்கியமான மீட்டிங்கில் இவர் சார்பில் மாதங்கி கலந்து கொண்டாளாம். இப்போது கம்பெனியை நிர்வகிப்பது அவள்தானாம். அவள் வீட்டில் உட்கார்ந்து அழுவாச்சி டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்பாள் என்றல்லவா நினைத்தேன்!

டாக்டர் ரங்கபாஷ்யம் பற்றியும் பேச்சு வந்தது. இல்லினாய் யூனிவர்சிட்டி நுழைவுத் தேர்வில் எனக்கு அடுத்த இடம் அவர் தானாம். ‘‘பயல் உன் மேல் வெறியாய் இருந்தான்,’’ ஒரு செய்தியாய் சொன்னார் அப்பா. ‘‘ஒரு பெண்ணோடு சுற்றுவதாகவும் தகவல்.’’

கண்களை குவித்து படிக்க முடியவில்லை. அப்பா மதுரமான குரலில் வாசிக்க, காதில் நுழைந்து மூளையில் சப்பணமிட்டது பாடம். நகம் கடிக்கிற பழக்கம் எனக்கு உண்டு. என் நகம் தீர்ந்ததும் அப்பாவின் கையை இழுத்து வைத்து நகம் கடித்து செல்லக்குட்டு வாங்கினேன். தோட்டத்துப் பூக்களை மாலையாக்கி மேலிருந்து அப்பாவின் கழுத்தில் போட்டேன். அப்பாவின் மடியில் கையூன்றி ‘‘உங்கள மாதிரியே ஒரு ஹஸ்பெண்ட் வேணும்பா’’ என்று கொஞ்சி நெளிய வைத்தேன். ‘‘ஒண்ணு போதுமா?’’ ரகசிய குரலில் அப்பா திருப்பிக் கேட்க நாட்கள் பறந்தன. இதற்கு முன் இவ்வளவு நெருக்கத்தில் தந்தையின் அன்பில் இருந்ததில்லை!

போகப் போக அப்பாவோடு பந்து விளையாடுகிற அளவு உடம்பு தேறியது!

இல்லினாய் யூனிவர்சிட்டி மூன்றாம் கட்ட நுழைவுத் தேர்விலும் முதலாய் வந்தேன்! அப்பா சந்தோஷத்திலும், துக்கத்திலும் தத்தளித்தார்.

நேர்முகத் தேர்வு சென்னையில். நான் ஏற்கெனவே அப்பாவிடம் ‘முழு சரணாகதி’ அடைந்து விட்டதால் பெட்டி படுக்கையோடு ‘எங்கள் வீட்டுக்கு’ பார்சலானேன்.

அன்றிரவு டாக்டர் ரங்கபாஷ்யம் போன் செய்தார். பயிற்சிக்கு தேரந்தெடுக்கப்பட்டவர்கள் அந்த பயிற்சியில் சேர்ந்து விட்டு பிறகு நீங்கினால் அந்த இடம் நிரப்பப் படாமல் காலியாகவே இருக்குமென்றும் இரண்டு வருடம் கழித்து புதிதாக நிரப்பப் படும் என்றும் பயிற்சியில் சேருமுன்னரே எனக்கு பயிற்சியில் சேர விருப்பமில்லை என்று எழுதி கொடுத்து விட்டால் எனக்கு அடுத்த நபர் அதாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமென்றும் தெரிவித்தார்.

‘‘சௌதாமினி, உணர்ச்சி வசப்படாதீங்க; நீங்க பயோகெமிஸ்ட்ரிதானே. லிவர் கான்சரை பத்தி தெரிஞ்சிட்டிருப்பீங்க. நீங்க வாழ்க்கைய முடிக்கப் போறீங்க; என் வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுங்க! பணம் எதிர் பார்க்கறீங்களா? எவ்வளவு வேணும்? பத்து லட்சம்... பதினைந்து லட்சம்?’’

‘‘சே.. சே, பணமெல்லாம் வேண்டாம்’’ என்றேன். ‘‘நீங்க சொன்ன மாதிரியே எழுதிக் கொடுத்துடறேன்.’’
தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (14-Sep-14, 12:01 pm)
பார்வை : 183

மேலே