ஒரு மணி நேரம்

மார்கழித் திங்கள் அதிகாலை மணி 3:30. அவளது கைபேசி மெல்லமாய் சிணுங்கியது.

படிப்பிற்காக வீட்டைவிட்டு தள்ளி, விடுதியில் தங்கியிருந்த அவளுக்கு துணையாய் இருந்த தோழிகள் இருவரும் அன்று இல்லை. ஒருவருக்கு திருமணம் முடிந்தது. இன்னொருவர் ஒரு வார வேலை விடுப்பில் தன சொந்தங்களை காணச் சென்றிருந்தார்.

கட்டாய அழைப்பாய் சிறப்புப் பூசைக்கு, கோவிலுக்கு செல்ல, குளிர்ந்த நீரில் சிலிர்த்து நீராடி சோம்பல் துறந்து உற்சாகம் அடைந்தாள்.

விடுதியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் இருந்த அக்கோவிலுக்கு தனியாக சென்றுவிடலாம் என பயத்தை தன்னுள் புதைத்து தைரியமாய் 4:15 க்கு தரை இறங்கினாள்.

கார் மேகம் இல்லாத கரு வண்ண வானை நிலா அவளுக்குக் காட்டியது. மரங்கள், அமைதியின் தாலாட்டில், பனிப்போர்வை போர்த்தி உறங்கிக்கொண்டிருந்தது.

ஒற்றை தெருவிளக்கு மின்னி அவளை படம்பிடித்து, பின் தெளிவாக பார்த்தது.
அவள் பாதம் பட இலை சருகுகள் துயில் கலைந்தது. தென்றல், மெல்லிசை பாடி அவளை உரசிச்சென்றது.

விடுதியின் தெரு கடந்து நீண்ட சாலை அடைந்து, வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.
சாலையின் நடுவில் தடுப்பு. அடுத்த பக்கம் நான்கு சக்கர வாகனம் அமைதியை கலைத்தவாறு சாலையை எழுப்பியது.

எதிர்புறத்தில் அவளை பார்த்த வண்டியிலிருந்த மனிதர்கள், சற்றே நிதானித்தனர். அதை கவனித்த அவள் கண்டுகொள்ளாதது போல் நடந்தாள்.

அடுத்த நான்கு அடியில் இருந்த ரௌண்டானா அவர்களுக்கு சாதகமாய் வழிவிட்டிருந்தது. நில், கவனி, செல் எனும் சாலை விளக்குகள், அவளைப் பார்த்து கவனி என எச்சரித்தது.
ரௌண்டானவை பாதி தூரம் சுற்றத் தொடங்கிய வண்டியை கண்ட அவளது கால்கள், பயத்துடன் சாலையை கடக்க ஆரம்பித்தன.
சுற்றிகொண்டிருந்த வண்டி நின்று, பின்வாங்கியது. பாதி சாலை கடந்த அவள், தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியுமா எனும் சந்தேகத்தோடு. தடுப்பின் மேல் நின்று ஒரு கணம் கடவுளே என்று நினைத்து அடுத்த பாதியை கடக்க, அவளது இதயம் படபடத்தது.
எதிரில் மூன்று சக்கர வாகனத்தில் வந்த ஓட்டுனர், அவளின் இதயத்துடிப்பை கேட்டவர் போல். 'எங்கம்மா போகணும்? வாறிங்களா?' என்றார்.

பின் வந்த வாகனம் நிற்காமல் நேராக சென்றது. மூச்சை உள்ளிழுத்து. ஆட்டோவில் ஏறி, இருக்கையின் நுனியில் உட்கார்ந்து. கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றாள்.

பத்திரமாக கோவிலில் இறக்கிவிட்ட அவருக்கு கையில் இருந்த இருபது ரூபாயை கொடுத்து, இறங்கிய போது அவளுக்கு கால்கள் நடுங்கியது.

ஓடிச்சென்று கூட்டத்தில் இணைந்தாள். அபிசேக மணி ஆலயத்தை நிரப்பியது.
குளிர் பனியிலும் அவளுக்கு வியர்த்தது.

மூச்சுவிட்டு மணி பார்த்தாள். 5:15. திரை விலக்கி காட்சிதந்தார் கபாலீஸ்வரர்.

எழுதியவர் : சக்தி ஸ்ரீ (14-Sep-14, 8:24 pm)
Tanglish : oru mani neram
பார்வை : 262

மேலே