அம்மாச்சி

கீற்றுக் குடிசையும்
கோழிக் குடப்பும் என
இரண்டு வரிகள்
போதுமாயிருந்தது
அம்மாச்சியின் அறிமுகத்திற்கு....
காலைச்சுற்றும்
கோழிக்குஞ்சுகளுக்கு
அரிசி போட்டுக்கொண்டே
இது இன்னாருக்கென
நேர்ந்து விட்டிருக்கும்
அம்மாச்சி....
மகள் வழியான
எங்களின் நேர்தல்களே
நிறைந்திருக்கும்
மாமன் பிள்ளைகளைக்
காட்டிலும்....!!
கூப்பிடு தூரமென்றாலும்
கோடை விடுமுறைக்கு
மட்டும்தான்
அம்மாச்சி வீட்டுக்கு....!!
நாங்கள் குடிசை
நிரப்பியிருந்த நாட்களில்
பச்சைப்பயறு
பாசிப்பயறென....
பிரசவித்துக் கொண்டிருக்கும்
அம்மாச்சி வீட்டு
மண்பானைகள்...!!
நேர்ந்துவிட்டிருந்த
கோழிக் குஞ்சுகளும்
சோற்றுக் கடனுக்காய்
மஞ்சள்பூசி
குழம்பில் குதிக்க
தயாராகியிருக்கும்....!!
ஒரு துக்கச் செய்தி
வந்திருந்த
இரண்டுமணி நேரம் முன்
இறந்து போயிருந்ததாம்
அம்மாச்சி.....!!
நாலுமணி நேரம்
கழித்து நாங்கள்
செல்கையில் ... நாற்காலியில்
சாய்ந்திருந்து அம்மாச்சி....
கால்களினடியில்
தரைகொத்தி அழுது
கொண்டிருந்தன
அடுத்த விடுமுறைக்கு
நேர்ந்து விட்டிருந்த
கோழிக்குஞ்சுகள்....
அம்மாச்சியும்
கோழிக்குஞ்சுகளும்
படித்திருப்பார்களா எனத்
தெரியவில்லை....
உயிர்களிடத்தில்
அன்பு செய்....!!