உயிராகும் நினைவுகள்
நிலவின் ஒளியொடு மலரின் பொலிவொடு
குலமது விளங்க பிறந்தது எனக்கொரு மதலை!
பாலொடு கலந்த தேன்கனிமொழி பேசி
காலொடு கலந்த பிராணவாயுவானது மழலை!
கட்டி முத்தங்களால் சுட்டிக்குறும்புகளால்-பெற்ற
மட்டிலா மகிழ்வால் என் முற்றம் ஆனது பிருந்தாவனம்!
கட்டிய கணவனும் எனைமறந்தாய் என ஊடுமளவு
தொட்டிலில் இட்டு சூட்டியபெயரே நான் ஒலித்த மந்திரம்!
குளிர் விழிகள் எனைநோக்கிச் சுழலும்!
தளிர் நடை என் தடம் பார்த்தேப் பயிலும்!
பள்ளிச்செல்லல் பெரும்பிரிவாய்க்கருதும்!
துள்ளிவந்து என் மடி சேர்ந்துத் துயிலும்!
அத்தனை நிகழ்வும் நித்தம் விரியுது நினைவுகளாய்!
அந்தம் வராமல் உயிருடன் நான் அந்நினைவுகளால்!
விழுதென நினைத்தது பழுதானது உணர்ந்தேன் ஓர்நாள்!
அழுதவிழியொடு முதியோர் இல்லம் வாழும் தாய் நான்!!