காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்-நூல் விமர்சனம் பொள்ளாச்சி அபி
“ஒரு கொள்கைக்காக வாழ்கிறோம்.அதை விளம்பரப் படுத்திக் கொள்வதுபோல எழுத வேண்டுமா..?” என்று கேள்வி கேட்டதோடு,தனது இறுதிக்காலம் வரை
தன் வரலாறு பற்றியோ,தனது சாதனைகள் பற்றியோ எதுவும் எழுதிவைக்காத “காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்” அவர்களைப் பற்றி,தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர்களுள் ஒருவரான ப.பா.ரமணி எழுதி சமீபத்தில் வெளியிடப்பட்ட நூல்தான் காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்.
ஆனால், கோவை நாடாளுமன்றத் தொகுதியின் சார்பில்,பதினைந்து ஆண்டுகள் நாடாளுமன்றத்திலும்,நாடாளுமன்ற மேலவையிலும் அவர் ஆற்றிய பணிகள் உட்பட,தொழிற்சங்கப் பணிகள்,போராட்டங்கள்,நாடகத்துறை என,அரசியல்,கலை, பண்பாட்டுத் துறைகளில்,அவர் மேற்கொண்ட உழைப்பும் பணியும்,தியாகமும் சாதனைகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
பிரிட்டிஷ் ஆட்சியின்போதே,சென்னை மாகாண முதல்வராயிருந்த டாக்டர். சுப்பராயன்,முதல் மற்றும் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண்மணியான ராதாபாய் ஆகியோரின் மகளாக,குமாரமங்கலம் ஜமீனின் வாரிசாகப் பிறந்த பார்வதி,எவ்வாறு இந்தியநாட்டின் விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றார், சுதந்திரத்திற்குப் பின்னும்,உண்மையான விடுதலையை நோக்கி எவ்வாறு தனது பயணத்தை வகுத்துக் கொண்டார் என,வரலாற்று நிகழ்வு களோடும்,ஆதாரங்களோடும்,மிக அரிதான புகைப்படங்களோடும் விளக்கிச் செல்கிறது நூல்.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கச்சென்ற பார்வதி,ஒரு கம்யூனிஸ்ட்டாக இந்தியா திரும்பியது,முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கல்லூரித் தோழியாக இருந்தது,கல்லூரித் தோழராக இருந்த என்.கே.கிருஷ்ணனை பின்னாளில் மணந்தது என..கால வரிசைப்படி விவரித்துச் செல்லும் இந்நூல்,ஒரு சுவாரஸ்யம் குன்றாத வரலாற்று புதினத்தைப் போல வாசகர் மனதைக் கட்டிப்போடுகிறது.
இந்தியா திரும்பிய பார்வதிகிருஷ்ணன்,மும்பையில் வாழ்ந்த கம்யூன் வாழ்க்கையும்,ஜமீன் குடும்பத்து வாரிசான அவரது திருமணம் ஐம்பது ரூபாய் செலவில் நடந்தது என்பதும் நெகிழ்ச்சியூட்டும் தகவல்கள்.
இந்தியக் கமயூனிஸ்ட் கட்சியின் முதல் அகிலஇந்தியச் செயலாளர் பி.சி.ஜோஷியின் எண்ணப்படி ‘இப்டா’ எனப்படும்,இந்திய மக்கள் நாடக மன்றம் உருவாக்கப் பட்டபின்,அதன் முதல் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பார்வதி கிருஷ்ணன்,கலை இலக்கியத்துறையில் பெரும் ஆளுமைகளாக இருந்த கதையாசிரியரும், திரைப்பட இயக்குனருமான கே.ஏ.அப்பாஸ்,சாந்தி பரதன்,அபனிதாஸ் குப்தா,கங்காதரன்,அப்புண்ணி,லீலா சுந்தரய்யா,கவிஞர் இக்பாலின்“சாரே ஜகான்சா அச்சா..” பாடலுக்கு இசையமைத்த இசைமேதை ரவிசங்கர், நடனக்கலைஞர் உதயசங்கர்,ஆகியோரை ஒருங்கிணைத்து,நாடகக் குழுக்களை ஏற்படுத்தி,மக்கள் பிரச்சினைகளை நாடக வடிவங்களில் கொண்டு சென்றதையும்,அப்போதே பிரபலமாக இருந்த இந்தி நடிகர் தேவ்ஆனந்த், கவிஞரும்,நடிகர் அமிதாப் பச்சனின் தந்தையுமான ஹரிவன்ஸ் பச்சன்,கவிஞர் கைபி ஆஸ்மி,இசைக்கலைஞர் எஸ்.டி.பர்மன் போன்றவர்களையும்,இப்டாவை நோக்கி இழுத்து வந்ததும், அவர்களின் முற்போக்கு சிந்தனையை கூர்தீட்டியதும் பார்வதி கிருஷ்ணனின் சாதனைகளுள் குறிப்பிடத்தக்கது.இதன் விளைவாக தேசவிடுதலை,ஏகாதிபத்திய எதிர்ப்பு,இந்துமுஸ்லீம் ஒற்றுமை,பஞ்சத்தின் கொடுமைகள்,மும்பை கப்பற்படை எழுச்சி ஆகியவை கலைவடிவில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.
இதேபோல்,ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தின் பொருளாளராக 1949.ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்ட பின், நடைபெற்ற தென் இந்திய ரயில்வே தொழிலாளர் போராட்டங்கள் முதல் கோவை மில் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள், நீலகிரி,வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள், திருப்பூர் மில்களில் பணியாற்றி வந்த பெண் தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் எனத் தொடர்ந்த,அவரின் பணிகள் வீரம் செறிந்தவையாக வெளிப்பட்டிருக்கின்றன.
I L O.- எனும், உலகத் தொழிலாளர் அமைப்பின் முடிவின்படி,பெண்களுக்கு சமவேலைக்கு,சமஊதியம் என்ற கோட்பாட்டை இந்தியஅரசு அமல்படுத்த வேண்டும்.பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் உரிமைவேண்டும்.மத்தியஅரசு ஊழியர்கள் சங்கம் அமைத்துக் கொள்ள உரிமைவேண்டும்,ரயில்வே நிர்வாகத்தில் அரசின் தலையீடின்றி,அது சுயேட்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும். முன்னேற்றத்திற்கு தடையாகவுள்ள மீட்டர்கேஜ் பாதைகளை படிப்படியாக அகற்றி விட்டு,நாடு முழுவதும் அகலரயில்பாதைகளை அமைக்கவேண்டும். என்பது உட்பட அகில இந்திய அளவிலான பிரச்சினைகளுக்கும்,
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தை விரிவுபடுத்தி பொங்கலூர்,பல்லடம் வரையுள்ள வறட்சியான பகுதிகளுக்கு பாசன வசதி கிடைத்திட வேண்டும். திருப்பூர்,பல்லடம்,சுல்தான்பேட்டை பகுதிகளில் புகையிலை விவசாயம் செய்யும் விவசாயிகளின் துயரங்களைக் களைவதற்குஈஅவர்கள் மீது விதிக்கப்படும் கலால் வரியை ரத்துசெய்யவேண்டும்.கோவைமாவட்டத்தில் இயங்கும் சிறுதொழில் பவுண்டரிகளுக்கு,தட்டுப்பாடில்லாமல் நிலக்கரி கிடைக்க அயல்நாடுகளிலிருந்து கடல்வழியாக கொண்டுவரவேண்டும் என,கோவை தொகுதி அளவிலான பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, தமிழகஅளவில் பாதிக்கப்படும் பல்வேறு பகுதி மக்களுக்காகவும் அவர் நாடாளுமன்ற வாழ்க்கையில் குரல் கொடுத்து இருப்பதும்,அதற்காக நடத்திய இயக்கங்கள்,போராட்டங்கள்,பேச்சுவார்த்தைகள் ஆகியவையும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விதம், சுருக்கமான இந்திய,தமிழக வரலாறு எனில் மிகையாகாது.
பார்வதி கிருஷ்ணன்,தனது குழந்தை இந்திரா,கணவர் என்.கே.கிருஷ்ணன் ஆகியோரை,பல சமயங்களில் பல காலம்வரை பிரிந்து இருந்திருக்கிறார்.நேரத்திற்கு சரியான உணவு,உறக்கம்,ஓய்வு இன்றி இருந்திருக்கிறார்.ஆனால், அவ்வாறான எதுவும் அவரது வாழ்க்கையை எவ்விதத்திலும் பாதித்துவிடவில்லை.ஏனெனில், இந்தியநாட்டின் நலன்,எனது சொந்த நலனைவிட முக்கியமானது என்ற மனப்பான்மையுடன்,எந்நேரமும் போர்முனையில் முன்னனியில் நிற்கும் போர்வீரனைப் போன்ற விழிப்புணர்வுடன்,தனது இடையறாத பணியை அவர் தொடர்ந்திருப்பது இன்றைய தொழிற்சங்கப் போராளிகள் அனைவருக்குமான பாடமாக இருக்கிறது.
சுவரொட்டிகளில்,முன்னாள் வார்டு கவுன்சிலர் என்பதைக்கூட,தன் பெயருக்குப் பின்னால் போட்டு,தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் நடுவே,“எனது பெயருக்கு முன் தோழர் என்பதைத் தவிர்த்து,முன்னாள் எம்.பி என்றோ,மற்ற கட்சிப் பதவிகளோ எதுவும் போடக்கூடாது..”என்று கண்டிப்பு காட்டிய பார்வதி கிருஷ்ணனை நினைத்தால்,இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆச்சரியமாகவும் இருக்கலாம்.
உண்மையான புரட்சியாளர்கள் எப்படி இருப்பார்கள் எனும் நிதர்சனமான சான்றாக, சமூகப்பணியும்,சொந்தவாழ்க்கையும் வௌ;வேறல்ல என, மக்களோடு,மக்களாக, வாழ்ந்து மறைந்திருக்கும் பார்வதி கிருஷ்ணனின் வாழ்க்கையை,எளிமையான மொழியில் விளக்கி,வெளிவந்திருக்கும்“காம்ரேட் பார்வதி கிருஷ்ணன்” எனும் இந்நூல்,அவர்குறித்த மேலும் பல வரலாற்று நூல்களுக்கு வழிகாட்டியாக இருக்குமென்றால்,அது மிகையில்லை.
நூல் ஆசிரியர்- ப.பா.ரமணி.
பக்கம்-175/ விலை-ரூ.125
வெளியீடு - சமூக விஞ்ஞான பயிலரங்கம்.
கலாமன்றம்-கோவை -641025