தமிழ் வாழ்ந்தால் நாம் வாழ்வோம்

சிந்தனையில் முந்திவரும்
சீர்தமிழே வணக்கம்
வந்தணைத்து வரந்தருவாய்
வரகவிஞன் எனக்கும்
பந்திவைத்துப் பரிமாற,
பாவகைகள் சமைக்க
எந்தமிழர் எதிர்காலம்
இனியதென அமைக்க ...

பிரிவினையாம் பேயதுவும்
பிணம்போல மறையணும்
அறிவினோடு மனத்தினிலே
ஆனந்தம் நிறையணும்
சரியதுவோ வன்முறையும்?
சத்தியமாக் குறையணும்
பரவிடனும் எங்கள்புகழ்
பாரெங்கும் தெரியனும் ...

இந்நாட்டின் முதுகெலும்பாய்
இன்றுவரை இருக்கின்றோம்
நன்னாடாய் ஒளிபெறவே
நாங்கள்தினம் கருக்கின்றோம்
எந்நாளும் பின்னிலையில்
இருப்பதனை வெறுக்கின்றோம்
முன்னால்வா! முத்தமிழே!
மூத்தவளே! அழைக்கின்றோம் ..

புதிராக இருந்ததெல்லாம்
போதுமம்மா போதும்
எதிர்காலம் எமக்கேதான்
எதிர்ப்பதில்லை ஏதும்
உதிராமல் எம்வாழ்க்கை
உயரணும்எப் போதும்
கதிரவனும் கடல்மலையும்
கவினுறஇது ஓதும்

மொழியதனைத் தாய்போல
முதலிடத்தில் வைப்போம்
பழிசூழாப் பண்புநலன்
பற்றைநமில் தைப்போம்
இழிவுதரும் எண்ணமெலாம்
எறிந்திடுவோம்! எரித்திடுவோம்!
வழியொன்றில் நாமொன்றி
வரலாற்றில் நிலைத்திடுவோம்....!

எழுதியவர் : அபி @ முஹம்மது நௌபல் (18-Sep-14, 9:18 pm)
பார்வை : 173

மேலே