கஇஷ்டம்
விளையாடி வீடு திரும்பி
அம்மா.....
சட்டையில் சிவப்பு மை
என்றேன்......
முகத்தில் மஞ்சள் பூசி
பெரியவள் என்றார்கள்...
தாவணி கட்டி
பழகும் முன்
பத்து பேரை கூட்டி வந்து
பருவ மகளை அமரச்செய்து
மஞ்சள் கயிறு கட்டி
மாமன் காலில் விழச்சொன்னார்கள்
ஏனென்றேன்
திருமணம் என்றார்கள்....
கணவன் தன்
கைப்பிடித்து
வீட்டுக்காரி என்றான்
மூன்றே மாதங்களில்
என் அத்தை என்னை
வேலைக்காரி என்றாள்....
முழுசாய் முளைக்காத
பிஞ்சுப்பிண்டத்தை
வயிற்றில் சுமந்து
பெட்டியோடு திரும்பினேன்
என் வீட்டிற்கு
நிம்மதி கிடைக்குமென்று....
என் அமைதி
ஐந்து நிமிடம் நீடிக்கவில்லை
என் தலைவலிக்கு
என் வீட்டுத்தலைவலி
தைலம் பூசியது....
படிக்கப்போகிறேன் என
நடித்துக்கொண்டு
படிதாண்டும் தங்கை....
வைத்தியசாலை கட்டிலில்
கனாக்காணும் தம்பி.....
வீட்டுக்குள்ளேயே
விறகொடிக்கும் அப்பா.....
எழுந்து நிற்க
கொழுந்து பறிக்கும்
அம்மா.....
ஈசலாய் வாழ்ந்தாலும்
பீனிக்சாய் திரும்பவே
எண்ணுகிறேன்...
பக்குவப்பட்டதாலோ
என்னவோ
என் கண்மையை கரைக்க
கண்ணீரும் மறுக்கிறது.....
நானும் கூட
ஒரு வகையில் பலசாலிதான்
காரணம்
கடவுள்
தாங்கிக்கொள்ளும்
திறனுடையவனுக்கே
கஷ்டத்தையும்
இஷ்டத்தோடு
அள்ளிக்கொடுப்பான்......!!!