படைப்பு

முன்னர் எழுதியது ................


ச்சை !
சத்தியமாய்
அது ஒரு
படமில்லை !
அந்த நடிகனுக்கு
இனி என் மனதில்
இடமில்லை !

வெடித்தே விட்டது
தலை !
வெறுத்தே விட்டது
கலை !

படத்தை இயக்கியவனுக்கு
சுத்தமாய் இல்லை
டேஸ்ட் !
மொத்தமாய்
மூன்று மணிநேரம்
வேஸ்ட் !

படம்
முடிவதற்குள்
முடிந்து போயின
ஒரு சில
யுகங்கள் !
கடித்துத் துப்பியே
காணாமல் போயின
கைவிரலின்
நகங்கள் !

ஆறுதல்
தரவில்லை
பாட்டு கூட !
அதை விட
இனிமையாய்
ஒலிக்கும்
தீபாவளி வேட்டு கூட !

படம் பார்த்தே
பலருக்கு வந்தது
காய்ச்சல் !
படம் முடிந்ததும்
தியேட்டரை விட்டு
அனைவரும் ஒரே
பாய்ச்சல் !

சத்தியமாய்
அது இல்லை
சினிமா !
சொல்லப்போனால்
அது
மூன்று மணிநேர
எனிமா !

போய் விட்டது
முன்னூறு ரூபாய்
தண்டமாக !
அரங்கை விட்டு
வெளியே வந்தோம்
கழுத்தறுந்து
முண்டமாக !

தன் பங்கை
நண்பன்
நிச்சயமாக
தருவானா ?
இனி நான்
படத்திற்குக்
கூப்பிட்டால்
வருவானா ?

இணையத்தில்
கண்டபடி
கிழித்திருந்தார்கள் !
மொத்த மதிப்பெண்ணில்
எண்பது விழுக்காட்டைக்
கழித்திருந்தார்கள் !

முன்னரே
விமர்சனத்தை
வாசித்திருக்கலாம் !
போவதற்கு முன்
கொஞ்சமாவது
யோசித்திருக்கலாம் !

ஒரு வழியாய்
வீடு வந்தபோது,
சோர்ந்து அமர்ந்திருந்தான்
சித்தப்பா பையன் !

அவனுக்கு
வயது
பத்து தான் !
படிப்பில் அவன்
சுடர்விடும்
முத்து தான் !

கேட்டதில்
பள்ளியில் ஏதோ
போட்டியாம் !
ஓவியம்
வரைய வேண்டுமாம் !

" ப்பூ.... இவ்வளவுதானா ?
கண்ணா ..........
நான்
கரைத்துக்
குடித்தவன்
கலைமகள் எழுதிய
காவியத்தை !
இதோ தீட்டுகிறேன்
காகிதத்தில்
ஓவியத்தை ! " என்றேன்


" பெண்ணை
வரையலாமா ? "
என்றதற்கு,
" சரி " என்றான்
சுட்டிப் பையன் !

மகிழ்ச்சியில்
வாயில் வரவில்லை
வாக்கியம் !
கிடைத்தது
காதலியை வரையும்
பாக்கியம் !

எடுத்தேன்
காகிதத்தை !
தொடுத்தேன்
பேனா எனும்
ஆயுதத்தை !

முதலில் முகம் !
வட்டமாய்
வரைய நினைத்து
கொஞ்சம்
நீள்வட்டமாய்ப்
போய் விட்டது !
முகம்,
வட்டமாய்த் தான்
இருக்கவேண்டும் என்று
சட்டமா என்ன !

பிறை நிலா போல
வரைய முனைந்தேன்
நெற்றியை !
அதில் நான்
அடையவில்லை
வெற்றியை !

அடுத்து கண் !
அதையாவது
அழகாய் வரையும்
என் நினைப்பில்
விழுந்தது மண் !
மை கொட்டி
அங்கே ஆனது
புள்ளியாய்
ஒரு புண் !

மச்சம் என்று
சொல்லி
சமாளித்து விடலாம் !

அடுத்து ,
புருவம் கொஞ்சம்
நீண்டு விட்டது !
உயிரிழந்து
அந்த ஓவியம்
மாண்டு விட்டது !

அடுத்தது மூக்கு !
அச்சச்சோ !
பெரிதாகப்
போய் விட்டதே
ஓட்டை !
விட்டு விடுவேனோ
நான்
ஓவியத்தில்
கோட்டை !

அடுத்து
வாய் ஆனது
சப்பையாக !
எறியத்தான் வேண்டும்
இனி
இக்காகிதத்தைக்
குப்பையாக !

ஒரு நப்பாசையில்
வரைந்த ஓவியத்தை
தம்பிப்பயலிடம்
காட்டினேன் !

அவன்
ஒரே வார்த்தையில்
சொன்னான் !

" ச்சீச்சீ.....
இந்தப் படம்
நல்லாயில்ல "

வெறும்
அரைமணிநேர
சிரத்தை தான் !
ஆனாலும்
ஆனாலும்
அது
வலித்தது !

================

- குருச்சந்திரன்

எழுதியவர் : குருச்சந்திரன் (21-Sep-14, 4:38 pm)
Tanglish : PATAIPU
பார்வை : 109

மேலே