அவள் மனுஷி ஆனால் நான்

நான் பெண்ணை அளப்பவன்!
என்னை ஆணென்றும் அழைப்பர்.!
மனிதனென்றும் நினைப்பர்.!!

நடுத்தரக் கனவுகளின்
சுமைகளைப் போக்க
அலுவலகம் வரும்
பெண்களை அளப்பேன்.!

ஆண்டுத் தேர்வில்
மதிப்பெண் தேடும்
மாணவியரின்
ஆசைகளை அளப்பேன்.!

நியாயம் கேட்டு
நீதிமன்றம் வரும்
நிம்மதி தொலைத்த
நிர்கதிகளை அளப்பேன்.!

வலைதளங்களில் வலைவீசி
அன்பாய் பழகும்
அத்தை வயதொத்தவளோ
அரும்பு மலரானவளோ
அனைவரையும் அளப்பேன்.!!

என் தோழி,
என் மனைவியின் தோழி,
என் தோழனின் தோழி,
அத்தோழியின் தொடர்கள்...
எவரையும் விலக்கேன்!!
எல்லோரையும் அளப்பேன்.!!

ஆனால்...
என் தாய்,மகள்
தங்கை,அக்காள்,
அவரை மட்டும்?...
அளவுகள் பாரேன்!!
அவர்களை அளவேன்!!

"அப்படித்தானே
ஏனைய பெண்கள்.!
அவர்களும்தானே
மனிதரின்
தாய் , மகள்.!
மற்றும்
தங்கை , அக்காள்.!!
அளத்தல் அபத்தம்."

சொல்லும் மனிதரிடத்து
மனிதனாய் நடித்து,
தனிமையில் ஒருநாள்
மூச்சு முட்ட
முகமூடி கலைத்தேன்.!

வாயில் நாற்ற எச்சிலோடு
உடலெல்லாம் உண்ணியாக
தன்னை அளக்காமல்
நின்று கொண்டிருந்தது!
ஒரு நாய்.!!

-- மறுபதிவு

எழுதியவர் : ராம்வசந்த் (22-Sep-14, 7:18 am)
பார்வை : 157

மேலே