இல்லாத உலகிலிருந்து

சொர்க்கமோ? நரகமோ?
பழக்கப்படாதவொரு உலகின்
இல்லாத வீட்டினுள்
இருக்கிறேன் நான்!
காலம் கடந்த பெருவெளியினுள்
அணுத்துகளாய் மிதந்தலைந்தாலும்
நினைவுகளின் மீள்பார்த்தலில்
நிலைத்து நிற்கிறது இந்நாள்!
இரட்டை நிலவுகளாய்
இருள்கிழித்த
ஒளிவெள்ளப்பெருவிளக்கு
ஒடுங்கிடுமோவென அஞ்சி
விரைகிறேன் இல்லம் நோக்கி!
என் கால்களைக்
கடன் வாங்கிப் போனது யார்?
இலக்கணப்பிழை தாங்கி
இறைந்து கிடக்கும்
மழழைமொழி கொத்த-உன்
முற்றத்திற்கு விரைகிறேன் காகமென!
திமிரும் என் சிறகுகளைத்
தீ மூட்டியது யார்?
தூக்கத்தைத்
தூர்வாரிக்கொண்டிருக்கின்றன...
உனையணைத்துத்
துயில்கொண்ட விழிகள்!
உன் எச்சில்பட்ட
எல்லா மிட்டாய்களிலும்
எறும்புகளாய் ஊர்கின்றன...
என் உணர்வுகள்!
உன்
பல் எண்ணிப்
பகல் கழித்தேன்!
சொல் எண்ணி
நாள் கழித்தேன்!
என்ன எண்ணி
இனிக் கழிப்பேன்..
முடிவுறாக் காலங்களை?
உன் அன்பிற்கான தாகத்தை
தீர்க்கமுடியா
என் இயலாமையினுள்,
உயர்ந்ததொரு வாசனையாய்
உதிர்ந்து மலர்கின்றன ஞாபகங்கள்...
மார்பில்
நீ பொழிந்த மூத்திரமென!
எங்கே நானெனக்
கேட்கத் தெரியா
உன் அறிவு வளர்ச்சியினுள்
ஏக்கத்தோடு எட்டிப்பார்க்கிறேன்...
மரணித்தபின்
இதுவே சாத்தியமென!
அடுத்த பிறவியொன்று
ஆத்மாவிற்குண்டெனில்,
அப்போதும் நான் வருவேன்..
உனது தந்தையாய்!
அதுவரைக்கும்.....
விளையாட
என்னிடம் தா!
உனதொரு பொம்மையை!