மேகத்தை குருவாக்கிய -கவிஞர் சித்ரா ராஜாசிதம்பரம்

கண்ணிலே காண்பதையெல்லாம் கவிதையாக்கும் ஒரு பரபரப்பு கவிஞனுக்குள் எப்போதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும்.அதனால்தான் அடிக்கடி கண்ணில் படுகின்ற பூ,மரம்,பறவை நிலா,மேகம் என..தனித்தனியாக இவற்றைப்பற்றியோ அல்லது தனது அனுபவங்களினூடோ இணைத்து கவிதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

இவ்வாறு கவிதைகளை எழுதப் புறப்படுகின்றவர்களின் அனுபவங்கள்,அது அவரது மனதுக்குள் ஏற்படுத்தும் எண்ணங்கள்,அதன் விளைவாக அவருக்குள் நிலைபெறுகின்ற அரசியல்..,இவையெல்லாம் வெளிப்படுத்தும் வார்த்தைகளினாலான படைப்புகளே வாசிப்பவரை தனக்கு அருகாமையில் அல்லது தொலைவில் நிறுத்துகிறது.

இன்றைக்கு கண்ணில் பட்ட கவிதையொன்று,கவிஞர் சித்ரா ராஜாசிதம்பரம் எழுதிய “மேக குரு..” எனும் கவிதை என்னை மிக அருகாமையில் நிறுத்திக் கொண்டது.[.. கவிதை எண்-213378 ]

குரு..என்றால் எல்லாவற்றையும் கற்றுத் தருபவர் என்பது நமக்குத் தெரியும். மேக குரு..எனில்..மேகம் நமக்கு என்ன கற்றுத் தரும்.? என்னதான் கற்றுத் தரமுடியும்..? என்ற கேள்விகளோடுதான் வாசிக்கத் துவங்கினேன்.

தனக்கு மட்டுமே பொருள் தெரிகின்ற வகையிலான சிக்கலான வார்த்தைகள் இன்றி,யார் வேண்டுமானாலும் வாசித்து அதன் ஆழமான பொருளை உணர்ந்து கொள்ளும்படியான எளிமையான சொற்களைக் கொண்டு தனது முதல் வெற்றியைத் துவக்கிக் கொண்டிருக்கிறது இக்கவிதை.

மேகக் கூட்டத்திடம் மிகச் சாதாரணமாக,துவங்குகிறது கவிஞரின் உரையாடல். “எங்கே பயணம்..? “ என்று கவிஞர் கேட்க, எங்கேயும்..என்று சொல்லும் மேகத்திடம் கவிஞருக்கு சந்தேகம்..
இலக்கில்லையா..? என்று கேட்கிறார்.

றாங்கள் ஆனந்தமாய்த்தான் அலைகிறோம் என்று சொல்லும் மேகங்கள்..அதற்குக் காரணமாக சொல்லும் விஷயங்கள் அனைத்தும் பாடங்கள்.!

தொடர்கின்ற உரையாடலில்,மேகக் கூட்டம் ஓரிடத்தில் சொல்கின்றன.
“ வேர்விட முனையாது,எல்லைகளற்று
வியாபிக்க முயன்றால்,பிரபஞ்சத்தின்
எல்லா உயிரும் ஓருயிர்தான்.!”

எல்லா உயிரும் ஓருயிர்தான் என்று அவ்வளவு நிச்சயமாக மேகக் கூட்டம் சொல்வதற்கான அனைத்து நியாயங்களும் இந்தக் கவிதையில் இருக்கின்றன. வாசித்து முடிக்கும்போது மேக குரு..என்று அவர் தலைப்பிட்டதன் பொருத்தத்தை நினைத்து எனக்குள் மாய்ந்து போனேன்.

ஆகா அந்த அனுபவத்தை நீங்களும் பெறவேண்டுமெனில் ஒரு பார்வை பார்த்து வாருங்கள்.கவிஞர் சித்ரா ராஜாசிதம்பரம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.!

பார்வையும்,கோணமும்,நல்ல சிந்தனைகளும் மிளிர்கின்ற இதுபோன்ற நல்ல கவிதைகளை தொடர்ந்து அவர் படைக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளையும் இங்கே எழுத்து தள உறவுகள் சார்பாக வேண்டுகிறேன்.

அன்புடன் பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (26-Sep-14, 9:54 pm)
பார்வை : 164

மேலே