அந்தப்புரத்து அடுப்பு
வெய்யில் உருக்குமோர் வெண்ணெய் அதுபோல
மெய்யை உருக்கும் மினித்தீ – அணைக்கத்
தணியும்., அணைக்கவே தன்னவன் இல்லாத்
தனிமை பிரிவோப் பிணி.
மன்மதன் அம்பால் மனம்தைத்த மன்னவன்
உன்மத்தப் பூவின் உயிரினைத் - தின்னும்
நரகம் தகர்த்தெறிந்து நற்சொர்க்கம் காட்ட
விரகம் அகலும் விரைந்து
சுண்ணாம்புத் தோண்டுஞ் சுரங்கத் தணல்போன்று
கண்ணாளன் இல்லாக் கனிமலர் –எந்நாளும்
வெந்தணல் வீழ்ந்தப் புழுவாய்த் துடித்தெரியும்
அந்தப் புரத்து அடுப்பு.
*மெய்யன் நடராஜ்