அன்பு மகன் சந்தோஷுக்கு

பத்துத் திங்கள் சுமக்க வில்லை
தத்து நானும் எடுக்க வில்லை
எழுத்து என்னும் வரத்தின் பயனாய்
எனக்குக் கிடைத்த பிள்ளை நீ !

தமையனாய் தளத்தில் வளைய வரும்
திருப்பூர் பெற்ற தங்க மகனே !
தடைகள் உடைத்து தலை நிமிர்ந்து
தரணி போற்றப் பேர் எடுப்பாய் !

துரோக முள் முதுகில் குத்தினாலும்
துன்பங்கள் உன்னைப் பின் தொடர்ந்தாலும்
துரத்தி அவற்றை விரட்டி விட்டு
துயர் மறந்து கவி புனைவாய் !!

விழியதி காரம் அழகாய்ப் படைத்தவனே
விரகமும் விரக்தியும் உன்கவி பேசுமே
விழி விரிய வியந்து பார்க்கின்றேன்
விதுலனே ! வானும் உந்தன் வசப்படட்டும் !!

தேனில் ஊறிய பலாச் சுளையாய்
திகட்டா தினிக்கும் உன்காதல் கவி
கொடுமை கண்டால் உன் எழுத்தோ
கொதிக்கும் எரிமலையாய் கனல் கக்கும் !!

சினமுள்ள இடத்தில்தான் குணம் இருக்கும்
சீறிடும் சிங்கமே இதுனக்குப் பொருந்தும்
சீரும் சிறப்புமாய்க் கலை உலகில்
சிகரம் எட்டிட நான் வாழ்த்துகிறேன் !!

உந்தன் கனவு மெய்ப்பட வேண்டும்
கண்டு நானும் களித்திட வேண்டும்
வெள்ளித்திரை உன்னைக் கொண்டாட வேண்டும்
விருதுகள் பலவும் பெற்றிட வேண்டும் !!

அன்பிற்கு அடி பணியும் அற்புதனே
அழகிய புதுக் கவிதை நாயகனே
அன்னையின் வாழ்த்தை ஏற்றுக் கொள்வாய்
அருமை மகனே நீ வாழ்க !!

எழுதியவர் : சியாமளா rajasekar (29-Sep-14, 3:16 pm)
பார்வை : 2447

மேலே