ஏழுமலை
உயரமான அந்த உல்லாச ஓட்டலில்
உண்டு முடித்து உணவுக்கு
உரிய தொகை
எழுநூறை வைத்திட்டார்
ஏழுமலை!
தப்பாக எண்ணிடுவான் சிப்பந்தி
என்றெண்ணி..பின்
வைத்திட்டார் டிப்ஸாக
ரூபாய் ஐந்து பத்தை!
வாசல் கதவுதனை திறந்தவனின்
கையில் தந்தார்
கம்பீரமாய் ..
ரூபாய் பத்தை!
ஒய்யாரமாய் நடந்து வந்த
துணைவியோடு
துள்ளலுடன்
போய் திறந்தார் காரின் கதவை!
கைகாட்டி நின்ற காவலர்க்கு
பெருமிதமாய் சிரிப்புடனே
எடுத்து தந்தார் ..இன்னுமொரு
ரூபாய் பத்தை!
கையில் தலை கலைந்த
குழந்தையுடன் ..
கையேந்தி வந்து நின்ற
கிழிந்த ஆடை பெண்ணவளை
தள்ளிப் போ ..
என்று சொல்லி
சென்றாரே ..ஏழுமலை!