உயிரின் சாட்சியாக

உயிரின் சாட்சியாக
====================
யாரும் பார்க்கா வண்ணம் அவளை
என் உள்ளங்கைய்யுள்
ஒளித்துவைக்கச் சொல்லியிருந்தாள்
அக்குழந்தை பட்டுப்பூச்சியொருத்தி
இறுகப் பிடித்தால்
மூச்சிறுகி வேதனிப்பாளோ
என்றுதானே
இலேசாக இறுக்கம் குறைத்து
என் சுவாசம் தந்தேன் அவள் உயிர்வாழ
ஒளியின் ஊடுரவல்களால் வளர்ந்து
அவ்விரலிடுக்கின் வழியே
வண்ணங்களைக்காணவே
அன்றுவரையான
என் அணைப்புகளை
அவ்வழியே வந்து போவோரிடம்
சிறையென புகார்ச்செய்து அழுகிறாள்
அவள் இறகுகளை
பிடுங்கிவிடவோ தைரியமில்லை
அகக் கூண்டிலடைத்துவிடவோ அனுமதியில்லை
சரி நீ பறந்துசெல்ல
என் கரம் விடுக்கிறேன்
இறக்கைகளை படப்படக்கும்
அற்ப இன்பத்தில்
கொஞ்சம் வண்ணங்களையாவது
என்மேல் உதிர்த்து போ
என் உயிரின் சாட்சியாகத்தான் வேலியிட்டேன்
ஆனால் தோல்விகள் சூழ
இதோ இன்றென் மூச்சுக்காற்றை துறந்து
உன்னை உயிர்ப்பிக்கிறேன்
யாருமற்ற ஒருநாள்
கைப்பேசியும் அலறும் அவன் கதிகண்டு ,,,
முகம்காணா பட்சிகள் சில
அவன் சுவர், மரத்தில்
காத்திருக்கும்
மீண்டுமான கவிதை வசந்தத்திற்காக ,,,
ஆனால்
அவன் ஆக்கையின் உறுப்புகளோ
இறுகி தணிந்து கனமாகிவிட
உயிரிலியாகிறது
அதோ அவன் சிறகுகளை முதுகில் சுமந்து
யாரையோ தேடியபடி காற்றிலே,,
அனுசரன்