லட்சுமி - இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் - வினோதன்

பிறப்பிலேயே தவழ்ந்த
என்னை - என் வசீகர
குரலால் கைப்பிடித்தாய்...
தாயென நினைத்தேன் - முதல்
முதலிரு வாரங்கள்
அன்பில் நினைந்தேன் !

என் முதுகின்மேல்
நீ படுத்துறங்கிய
முன்பனிக்கால - பின்
இரவுகளில் - நாம்
விடிய விடிய பேசித்
திரிந்தோம் பசிமறந்து !

உன்கைகளுக்குள் - என்
கைத்திணித்து - கால்களுக்கு
செவி சாய்த்து - என் கால்களை
கறுப்புச்சேலை காரியிடம்
கடன் கொடுத்து - ஓட ஓட
சுகம் காண்கிறேன் - கால்
தேய்ந்த வலிகள் உணர்ந்தபோதும் !

என் கண்களில் - நீ பார்த்த
பலரின் கண்களும்
எனக்கு மனப்பாடம் - எனை
நிற்க வைத்துக்கொண்டே
நீ படித்ததுண்டு காதல்பாடம் !

என் குடலுக்குகந்த
திரவ உணவை திரட்டி
ஊற்றி - பசியென்று
ஒன்றை காணமல்
மறைத்து விடுகிறாய் !
மாதக் கடைசிகளில்
பசித்தும் பசிக்காததாய்
நடித்ததுண்டு நான் !

கறுப்புச் சேலைக்காரியின்
இடை வளைவுகளில் - வழுக்கி
விழுந்த சமயங்களில் - கழுத்து
திருப்பி உன்னை கவனிக்க
முடியாமல் கத்தியிருக்கிறேன்
நீ எழுந்து வந்து
அணைக்கும்வரை !

தீபாவளி, பொங்கல்
நமது இருவரின்
பிறந்த நாட்களுக்கு - நீ
மாலை போட்டபின்...
அழுத விழிகளை
துடைத்திருக்கிறாய்
மாலையின் தண்ணீரென !

மழையின் குளுமையும்
வெயிலின் இனிமையும்
தாங்கிக் கொண்டு - தனிமையில்
கால் கடுக்க - நிற்க
வைத்திருகிறாய்...!
கோபமில்லை உன்னிடம்...
கரமென்ன மதுவோ ?
உன் கரம் பற்றிய வினாடி
கரைந்துபோகுமது !

கடந்த பிறந்தநாளில்
எனை கட்டியணைத்து
முத்தம் கொடுத்து
கையும் குடுத்தாய்...
அன்றிரவு - நான்
உன் காலில் விழுந்து
ஆசிர்வாதம் வாங்கியபோது
கால் இடறி விழுந்ததாய்
தூக்கியும் விட்டாய் !

நான் புதுப்பேட்டை வழியாக
கண்ணமாபேட்டை செல்ல
விரும்பவில்லை - உறுப்புகள்
அழுகி சாகும்போதும் - நான்
உன்னுடனே இருக்கவேண்டும் !
உன்னோடு இருந்தால்
எனக்கேது மரணம் ?

என் முகத்து முகடுகளில்
தமிழில் உன் பெயரின்
முன்னெழுத்து "நான் தமிழன்"
எனும் வரிக்குமேலே
புலியாக சுடர்விட...
சிவப்பு கண்டு சினந்து
மஞ்சலேனில் மருகி
பச்சை கண்டதும் பாய்கிறேன் !
உன் வெற்றியை துரத்தி
ஓடுகிறேன் - காதலி கண்டு
என்ன செய்ய ???
போகவா ? நிற்கவா ?
நின்று போகவா ?
போகாமல் நிற்கவா ?

குறிப்பு: லட்சுமி எனது இரு சக்கர வாகனம் என்பதை தாழ்மையோடு தெரிவித்துகொள்கிறேன்)

எழுதியவர் : வினோதன் (2-Oct-14, 6:10 pm)
பார்வை : 79

புதிய படைப்புகள்

மேலே