கைபேசி

அதிகாலை வேளையில்
போர்வையை இழுத்து பிடித்து
உறங்கும் போது காதை திருகி
செல்ல சினுங்களாய் அழும்
சிறு குழந்தையாய் கைபேசி..!
பஸ் பயணத்தில்
கூட்ட நெரிசலில் வீறிட்டு
அழும் சிறு குழந்தையாய்
கைபைக்குள் கதறும் கைபேசி..!
அலுவலக வேலையில்
டென்ஷனாய் இருக்கும் போது
அது புரியாமல் அடம் பிடிக்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!
தனிமையில் இருக்கும் வேளையில்
ஓடிவந்து கட்டி பிடித்து கன்னத்தில்
முத்தமிடும் சிறு குழந்தையாய் கைபேசி..!
அடிக்கடி தொலைத்துவிட்டு
தேடி தவிக்கும் வேளையில்
எங்கோ மறைந்திருந்து
கண்சிமிட்டி சிரிக்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!
இரவு உறங்கும் வேளையில்
தூங்காது சினுங்கி நம்மையும்
தூங்கவிடாமல் செய்யும்
சிறு குழந்தையாய் கைபேசி..!
அதிகாலை முதல் இரவு வரை
கைகளில் விளையாடிவிட்டு
நம்மோடு நம் தலையணைக்கு
அருகில் அலுத்து உறங்கும்
சிறு குழந்தையாய் கைபேசி..!