முதுகெலும்பி 1

ஒலக சனம் அம்புட்டு பேருக்கும் கும்புடறோம் . எவ்வளவு நாளுதானுங்க வாயப் பொளந்து பாத்துகிட்டே கெடக்க..? எங்களுக்கும் மனசிருக்கே.. வெத்து மனசுக்குள்ள வெடிச்சிருக்காத ஆசையெல்லாம் பூக்க வச்சி பாத்துபுடனுங்க. எவ்வளவு காடு கரைய பாத்துட்டோம். இதை செய்ய முடியாதா..?

இந்த ஊருக்கே சோறு போட்ட கதையெல்லாம் பழசு. ஒழைச்சி .. உழுது... வெதச்சி... களைச்சி... கள்ளுகுடிச்சி வாழ்க்கைய பந்தத்தோட பங்கமில்லாம வாழ்ந்திருந்த நாங்க எங்களை பதிவு பண்ணிக்கிறாமெ போய்ட்டமோன்னு ஒரு சின்ன ஆதங்கம். நாங்க முழுசா வதங்குறதுகுள்ள பதிஞ்சிரனுமுங்க. அதுக்குதா எங்கள்ள ஒருத்தனா இந்த முதுகெலும்பிய அனுப்புறோம். இவஞ்சொல்லு.. எங்க சொல்லு. இவங்கருத்து எங்க வாழ்க்கை. எங்க சனத்துல இவம் பெரிய கதை சொல்லி.... படிச்சி பாருங்கப்பு எங்க வாழ்க்கைய....

எத்தின மாவட்டம் இருக்குன்னு தெரியலை. ஆனா எல்லா மாவட்டத்திலயும் எங்க ஊரு இருக்கு. நாங்க இருக்கோம். நெல்லு.. கடல.. வாழ.. பருப்பு.. உளுந்து .. தென்ன... மா ... மீனு.. இப்படி ஏதாவது உருப்புடாத பொருளைச் செஞ்சி வீணாப்போன ஒதவாக்கர பயலுக நாங்க. உங்களுக்கு. பட்டிகாட்டுப் பயலுகன்னும் சொல்லக் கேள்வி.

நா எங்க ஊரு கருக்கலில இருந்து ஆரம்பிக்கிரெம். எங்களோட நாளு அப்பதே ஆரம்பிக்கும். எப்படி அம்புட்டு சரியா கருக்காலன்னு கண்டுபுடிப்போம் தெரியுமா..? எங்களுக்கு கருக்காலன்னா நாலரை மணி. எங்க ஊருக்கு மொத பஸ்சு அப்பத்தேன். மொத பஸ்சுன்னு சொல்றத விட ஒரே பஸ்சுன்னு சொல்றது சரியா இருக்கும். பக்கத்து டவுனுக்கு இவுகதா மாறி மாறி டிரிப்பு அடிப்பாக. அதுவும் வாரத்துல ஆறுநாதா கணக்கு. இவுகளுக்கும் ஒரு நாலு லீவாமா . இங்க ஊர்லையே தங்கிருவாக. இல்லன்னா பஸ்ஸ இங்கன விட்டுட்டு ஊருக்கு போயிருவாக. ஆனா கருக்கல்ல சரியா பஸ்ஸ எடுத்தாகன்னா யாரையும் கேக்க மாட்டோம் மணி நாலரை... அவுக திரும்பி வாரப்போ எட்டு. இப்பிடிதாங்க மணி பாத்துகிருவெம்.
அந்த பஸ்சுதா எங்களுக்கு ஒரு மாடு கட்டாத லோடு வண்டி.

பஸ்ஸ பத்தி அப்பறம் பேசுவேம். அது வந்து போறது. அதுக்கு முன்னாடியே எங்க ஊரு ஆளு ஒண்ணு முழிச்சிகிரும் அவகதா சின்னச்சாமி அண்ணே. அவரு முழிக்கிரப்ப மணி நாலு. காரணம் எல்லாம் வெளக்க முடியாது.. நீங்க எந்த விஞ்ஞானத்துல எப்படி சூரியமகராசா வாறது கெழக்குன்னு சொல்றியளோ.. அப்படித்தா எங்க ஊரு விஞ்ஞானத்துக்கு அவரு முழிச்சா மணி நாலு. பஸ்சு வாரத்துக்கு முன்னாடியே அடுப்பு பத்த வச்சிருவாரு. எங்க ஊர்லே கணக்கு சரியா கூட்டுறது அவருதேம். அவரோட டீத்தண்ணிக்காகவே எங்க ஊரு கெழடு எல்லாம் அவரோடவே முழிச்சிரும். மனுச.. டீத்தண்ணி போட்டாருன்னு வைங்க. கையைவிட்டு கலக்கி எடுத்தா கைல நிக்கும் அம்புட்டு தெடம்.

அவருக்கும் காணி.. கழனி..வயக்காடு தோப்பு தொறவு எல்லாம் இருக்குதுங்க. ஒரு காலத்துலேயே எங்க ஊர்ல வெளிநாடு பாத்தவரு. இன்னைக்கி வரைக்கும் அவருதேம். பத்து வருஷம் பனஞ்சருகா கிழிஞ்சி ஒழைச்சவரு.... வந்த பத்து நாள்ல பொண்டாட்டி புள்ளைய கொள்ளை நோயிக்கி குடுத்துப்புட்டாரு. அன்னையநாளு தொட்டு வீடு. கடை சொத்து.. சொகம் எல்லாமே இங்கினதேன்.
எங்கப்பு வயசு ஆளுகள்லாம் அண்ணன்னு கூப்பிடும்.. எளவட்டம் நாங்கள்லாம் சாமித்தாத்தான்னு கூப்பிடுவெம். எல்லாத்துக்கும் பதிலா "வாங்க...... அவ்வளவுதேன். பதில்.

எங்க ஊர்ல ஆலமரம் அடில இருந்த அந்த கடைதே பஞ்சாயத்து. பஸ்சு நிக்கிறஎடம் எல்லாமே.. எங்கூரு வரவு செலவு... த்திருவிழா பேச்சு எல்லாம் அங்கேதா நடக்கும்... எல்லாம் பேசி முடிச்சிட்டு என்னண்ணே சரிதானேன்னு கேட்டா.. சரியா இருந்தா சிரிப்பு.. தப்பா இருந்தா இது மட்டும் நல்லால்லே... அவ்வளவுதான் சாமித்தாத்தா பேசுறது. அதுவும் அவரு டீத்தண்ணி ஆத்திக்கிட்டே சொல்லும் அழகு இருக்கே... ஒருதுளி கூட கீழ சிந்தாதுங்க. மதகு வலையில தப்பிச்ச மீனு கணக்கா அப்பிடி இருக்கும்.
இருட்டுப்பூச்சி கொர்ர்ர்க்கும் இவரு ஆத்துற சொர்ர்ர்க்கும் எப்பவுமே போட்டிதான்.

இத எதையுமே கண்டுக்கிறாம வெத்தலக்கி சுண்ணாம்பு கேட்டு முத்தாயி அம்மாச்சிய நச்ச்சரிச்சிருக்கும் கூட்டம். "ஏலே... என்னை கொண்டு போறதுக்குள்ள ஒரு நாளைக்காவது நீங்க எனக்கு வாங்கித்தாங்கடான்னு" பொய்யா சலிச்சிகிட்டே சந்தோசமா குடுக்கும். முத்தாயி அம்மாச்சி.. ...
சரிங்க.. வெளுக்குது. மாடு அவுத்து ஏறு பூட்டணும். இப்ப பூட்டுனாத்தே பஸ்சு திரும்பி வாரப்போ நிப்பாட்டலாம். அப்ப சொல்றே முத்தாயி அம்மாச்சி பத்தி....


(முதுகெலும்பி நிமிரும்....)

எழுதியவர் : நல்லை.சரவணா (7-Oct-14, 2:37 pm)
பார்வை : 286

சிறந்த கட்டுரைகள்

மேலே