சிறுவனும் மூதாட்டியும்
பிஞ்சுக் கைகளை - வயதில்
மிஞ்சியக் கைகள் பிடித்து நடக்கிறது.
பால்மனம் மாறாதப் பாலகனின்
பரிதவிப்பினைக் கண்டு ஏங்குகிறது.
விதைத்து வளர்ந்த இளந்தளிரே.
வேதனையாய் இருக்கிறது உனது தனிமையே.
விரட்டிவிட்டது யாரடா? - தெரு
வீதியில் தனித்துத் திரிவது ஏனடா?
சிறுவிளக்கு ஒளியில்தானே இருள் விலகும். - உன்
சிங்கார முகத்தில்தானே ஏக்கம் கலையும்
கலை ஒளியே. கவிதைத் திருவே. - உன்னைக்
கவலைப் பற்றிக் கொள்ள வித்திட்டவர்கள் யாரடா?
ஒரு உயிரும் ஒரு மெய்யும் இணைந்த வேளையில்
ஒரு உயிர்மெய்யாய் உருவெடுத்த உயிரே. - நீ எந்த
ஓவியனால் தீட்டப்பட்டச் சித்திரம்? - இந்த அழகு
சித்திரத்தை சிதைக்கவிட்டு - உல்லாச
சிகரத்தில் சிரித்துக் குலாவும் மதிக்கேட்ட
சான்றோர்கள் சாதிப்பது எதையடா?
திறந்த மேனியாய்
தெருவெங்கும் திரிகின்ற வானமே. - எந்த
மேகங்கள் உன்னை அரவணைக்க
மறுக்கின்றன. - அந்த
மேகங்களைத் தாங்குகின்ற வானம்தான் எது?
ஒரே வானம் ஒரே பூமி - அவர்களின்
ஒரே வானமான உன்னை - இந்த
ஒரே பூமியில் அலையவிட்டு எந்த வெளிச்சத்தில்
அவர்கள் வாழப் போகிறார்கள்.
முன்னூறு நாள் உன்னை
மடிசுமந்து - தாய்மை
முத்தத்தால் உன்
முகத்தை ஈரப்படுத்தி - பாசம் எனும்
நிலத்தில் விதைத்து வளர்த்தாளே.
யாரோ விதைத்த விதையில்
யாதும் அறியாமல் விளைந்தப் பயிரே.
நான் இருக்கிறேனடா - என்னோடு
நடைப்போட்டு - இந்த மூதாட்டியுடன்
நாளையப் பொழுதை விடியலாய்
நாம் உருவக்குவோமடா.
ஆயும் அப்பனும் எனக்கிருந்தும்
அனாதையாய் திரிகின்றேன்.
ஆனால் நீயோ - மாளுகின்ற
ஆயுளில் தனித்துத் திரிவது ஏனோ?
என்னைப் பெற்றவர்கள்
ஏங்கவிட்டார்கள் - உன்னையோ
ஏங்கித் தவிக்க தெருவில்
எப்படித் தான் விட்டார்கள்.?
பெற்றப் பிள்ளைகள் - சுமை நீயென
பற்று அகன்று - தெரு
முற்றத்தில் தள்ளிவிட்டர்களோ?
அவர்கள் வெளிச்சத்தில் வாழ
உன்னை இருட்டில் வாழச் சொன்னார்களோ?
நீனும் நானும் இருட்டில் இருந்தாலும்
நாளை என்பது நமக்கு
விடியாமலா போய்விடும்.