விட்டுப்போனவளின் அடையாளங்கள்

விட்டுப்போனவளின் அடையாளங்கள்
===================================

எத்தனை நிறைத்தாலும்
போய் வருகிறேன் என்னும்பொழுது மாத்திரம்
ஏதுமே நிரப்பாதது போலவே
சிறு முறுக்கு ம்ம்ம்ம் போ என்று

அந்த அறை தெரியுமா
ஏதுமறியா அகவையில் அடைப்பட்ட நாள்முதல்
தானே அனர்த்திக்கொண்டிருந்த
தளவாடங்களும்
முகமல் திரைப்போர்த்திய
தேக்குமர ஜன்னல்களும்
தென்றற்காற்றும்
வாயிற்படிக்கட்டுகளை கிழித்துக்கொண்டிருக்கும்
நிலா வெளிச்சமும்
என் நடுக்க சுவரம் பாடிய
அலைபாயுதே கண்ணா என்ற பாடலும்
இதுவரையும்
உண்டு கழித்த தனிமையை
புதுப்பிக்க வந்தவன் நீ என்றேன்

நீ பிறந்த நாள்முதலே
நின்னை பிரேமிக்க ஆசைக்கொண்டவள் நான்
ஏதோ உன் பார்வை
காலம் கடந்தென்னை தொட்டுப்போனதால்தான்
இதோ இன்றும் வீணை மீட்டாத மீராவாய்
உடைந்த விசும்பல்களை
சமர்ப்பணம் செய்கிறேன் உனக்காய்
என் விழிவிடுத்த துளிகள்
உன் நரம்புகளை மீட்டவில்லையா மதனா

யாரோ ஒருவரின் விளிகேட்கும் போதெல்லாம்
ஒட்டிக்கொண்டு உதிரா
கோகோ மிட்டாயின் உறையைப்போலவும்
பாதி அரைத்த சந்தனம்
விக்கிரகத்திற்கு சேராததைப்போலவும்
இடையில் சிக்கிக்கொண்ட
என் எண்ணங்களை
உன்னுடன் சங்கமிக்கநேரும்
கணமெல்லாம்
"இதோ வாரேன்" என்று
சொல்லிப்போனபின்னாலும்

அந்த அறையிலேயே சுற்றிக்கொண்டிருக்கும்
பதின் ஒன்பது வயதுக்காரி
பிச்சிப் பெண்ணொருத்தியை
இங்குதானே விட்டுப் போகிறேன்
அவளின் அடங்காத யௌவனத்தின்
ஆசுவாசங்களுடனும்
உன்னுடனான உரையாடல்களின்போது
சொற்கடன்பட்டுவிட்ட சங்கடங்களுடனும்
உன் முத்தங்களால்
பதியமிட்டுப்போகும் அவள் மனக்கரையில்
வாழ்ந்துகொண்டிரு
மெது மெதுவாய் அவள்
பிறையாக வளரும்வரை வாழ்ந்துகொண்டிரு

ஆம் என் விழுங்கமுடியா
சுவாசமது
உன் ஏப்ப சுவாசத்துடன் முட்டிமோதிடும்
மரணகனம்போல
என் கனகச் சிலம்பொலிகள்
உன் இரவறுக்கட்டுமடா மதனா

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (8-Oct-14, 2:44 am)
பார்வை : 95

மேலே