சே குவேரா
புரட்சியின் இன்னொரு சொல் சே குவேரா..
நினைக்கும் போதெல்லாம்
உறமேற்றுகிறான்
சோம்பிக்கிடக்கும் நரம்புகளை
துடித்தெழ செய்கிறான்
உடைந்துபோன உள்ளங்களில்
புத்தொளி பாய்ச்சுகிறான்
உனக்குமல்ல எனக்குமல்ல
உலகத்துக்கே உரியவனாகிறான்
உழைக்கும் வர்கத்தின்
உயிரொளியாய் உயர்ந்து நிற்கிறான்
உன்னையும் என்னையும்
களத்தில் இறக்கிவிடுகிறான்
காற்றலைகள் உலகம் யாவும் பரவிக்கிடப்பதுபோல்
மனித மானுடத்தின் இதயங்களில் நிரம்பிக்கிடக்கிறான்
அசாத்தியங்களை சாதித்துகாட்டிலும்
யாதார்தமானவர்களுக்கு உரமாகிறான்
தனிஒரு அடையாளத்திற்கு
சொந்தமாகாமல் மனித சமூகத்திற்கே
உயிரோட்டமாகிறான்
துப்பாக்கி தோட்டாக்களோடு
புத்தகங்களை கட்டு கட்டாய்
தன்னுடன் எடுத்துசென்றவன்
புத்தகங்களை வாசித்தான்
மக்களை நேசித்தான்
மானிட விடுதலையை யாசித்தான்
அதற்காக தன்னையே
விதையாய் வித்திட்டான்
ஆதலாலே மரணமற்று வாழ்கிறான்
எங்கள் சே குவேரா....உலக சரித்திரத்தில் பெயர்பெற்றவர்களில் சே குவேரா முக்கிய இடத்தில் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் ஜாதி, மத, இன,மொழி, நிற, பேதங்களுக்கு அப்பாற்பட்டவர்.எல்லோரையும் மனிதர்களாக தான் பார்த்தார். அப்படியே வாழ்ந்தார்.
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
"உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"
இவ்வுலகத்தில் சீறி சினந்த தோட்டாக்கள் யாவுமே தன் சொந்த நாட்டு மக்களுக்காக பாய்ந்தது.'சே'வின் தோட்டாக்கள் மட்டுமே இனங்கள் மறந்து மொழிகள் அற்று நாடுகளின் எல்லைகள் அறியாமல் அநியாயங்களிடையேசிக்கித்தவித்த மனிதனுக்காக பாய்ந்தது. மாவீரர்களை மரணம் புதைப்பதில்லை,விதைக்கிறது !