நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

ஏதோ ஒரு சாரசரி கம்பனியில் அவன் வேலை செய்து கொண்டிருக்கிறான் . ஒரு டூ வீலர் , வாடகை வீடு , மாசத்துக்கு ஒரு சினிமா , 15 நாளுக்கு ஒரு முறை கறி... எப்பயாச்சும் மனைவிகிட்ட அனுமதி வாங்கி ஒரு பீரு ...
ஒரு நண்டு LKG ல , இன்னொரு சுண்டு அவன் மனைவி வயத்துல .
400 ரூபா புடவை எடுத்துக்க கொடுத்தா , 200 ரூபாக்கு எடுத்துட்டு மீதி 200 ரூபாய நண்டு சுண்டு பேர்ல பேங்குல போட்டுருவா அவன் பொண்டாட்டி ....அவன் ஒரு டீ கூட வெளிய குடிக்க மாட்டான் .இப்படி இருந்தாதான் அவன் குடும்பம் நடக்கும் கடன் இல்லாம.
புள்ளைங்களுக்கு ஏதாச்சும் நல்லதும் செய்ய முடியும் .

இப்படி போயிட்டு இருக்கிற அவன் வாழ்கையில , திடீர்னு ஒரு போன் வருது" .நாங்க எங்க இந்திய வணிக செயல்பாடுகளுக்கு COUNTRY MANAGER தேடுறோம் ... உங்களால சிங்கப்பூர் வர முடியுமா" ன்னு ஒரு ஆங்கில தேன் குரல் மறுமுனையில் .
அவன் கைகால் , அயல் நாட்டு ஆங்கிலம் ஏதும் புரியாமல் ஒகே என்று சொல்லி வைக்கிறான் ..

அவன் அவ்வளவா படிக்காதவன் ... அவ்வளவா என்ன ... ஒன்னுமேன்னு சொல்லலாம். 10வது படிப்பை மட்டும் முடிச்சவன் . அதற்கு மேல் உள்ள படிப்புகளை ஏதோ சில காரணங்களால் கால் , அரை , முக்கால் என கை விட்டவன் ..
இதெல்லாம் சும்மா ....படிப்பு அவனுக்கு ஏறல என்பதுதான் சரஸ்வதி சத்தியம்.

அவன் இத படிக்கிற உங்கள மாதிரி தமிழ் கூறும் நல்லுலகில்தான் இருந்தான் . ஆனால் வாழ்க்கை அவனை மீளமுடியாத அளவுக்கு அடித்துப் போட்டது .அடிகளில் இருந்து மீள்வது அப்புறம் பார்ப்போம் ...முதலில் அடிகளை மறப்போம் னு அவன் வெளியூருக்கு ஓடி விட்டான் , கையில் 2000 ருபாய் எடுத்து கொண்டு...

முதலில் காமா சோமா வேலைகள் செய்து பிறகு இந்த சராசரி வேலைக்கு வந்துவிட்டான் .நடுவில் அவனை விட இன்னும் பொருளாதாரத்தில் நலிந்து இருக்கும் குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டான் .பிறகு நண்டு , சுண்டு ...அதெல்லாம் ஏற்கனவே சொல்லிவிட்டேனே ...
இந்த நிலையில்தான் சிங்கப்பூரில் இருந்து போன் ....பிறகு ஈமெயில் அனுப்புகிறார்கள் .

முதலில் செஞ்ச காமா சோமா , இப்ப செய்ற சராசரி எல்லாத்தையும் சிறப்பா செய்யனும்னு நினைப்பான் .செய்வான் ..அவனுக்கு ஓரளவு புடிச்ச நடிகர் கூட ஒரு பேட்டியில சொல்றார் அவரோட அம்மா சொன்னத .. " நீ கக்கூஸ் கழுவுற வேலை செஞ்சா கூட, உலகத்துலேயே சிறந்த கக்கூஸ் கழுவறவன் கமலஹசன்னு தான் எல்லாரும் சொல்லனும் "..

இதெல்லாம் கேள்விப்பட்டுதான் அவனை ...(கமலஹாசனை அல்ல ) சிங்கப்பூர் அழைக்கிறார்கள்.

சிங்கப்பூர் சென்று வருவதற்கான டிக்கெட் வந்து விட்டது .இருந்தாலும் முதல் முறை வெளிநாடு பயணம் .அதனால் கொஞ்சம் பணம் தேவை படுகிறது . அவன் தோழி ஒருத்தி உதவி செய்கிறாள் .

2003 அக்டோபர் 9 விமானம் ஏறுகிறான் .
இங்கு இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் . அவனை பற்றி தகவல்களை திரட்டி அவனை வேலைக்கு அழைத்தவர் ஒரு பெரிய கம்பனியின் நிர்வாக இயக்குனர் , முதலாளியும் கூட .
அவர் பெயர் B C KANG .
சிங்கப்பூரின் பெரிய பணக்காரர்களில் ஒருவர் . அவன் அந்த கம்பெனி பற்றியும் , அவரை பற்றியும் இணையங்களில் தேடி தெரிந்து கொள்கிறான் விமானம் ஏறும் முன்பு .

அவனுக்கு தகவல் வருகிறது . சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தால் அவன் பெயர் கொண்ட அட்டையை கம்பெனி பிரதிநிதி பிடித்துக் கொண்டிருப்பான் என்று .

சரி இப்ப அவன் உங்களுக்கு ரொம்ப அறிமுகம் ஆயிட்டதால இவன் ன்னு சொல்லுவோம் .

இவன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கி வெளியே வந்தான்.சொன்ன மாதிரியே ஒருவன் இவன் பெயரை பிடித்து கொண்டிருந்தான் .
அட்டை பிடித்தவன் கேட்டான் - "பயணம் நல்ல படியாய் இருந்ததா .?"
"ஆம் "
"நீ சிகரட் பிடிப்பாயா? "
" சில சமயம் "

சரி பிடிப்பதாய் இருந்தால் இங்கே பிடி என்று இவனின் பையை தூக்கிக் கொண்டான்.
"இல்லை பரவா இல்லை "

பையை கார் டிக்கியில் வைத்து விட்டு காரை எடுத்தான் அவன் .
இவன் நாகரீகம் கருதி முன் இருக்கையில் உட்கார போனான் .
" முன்னால் உட்கார்ந்தால் சீட் பெல்ட் போட வேண்டி இருக்கும் . பின்னால் ரிலாக்ஸ் ஆய் உட்காரலாம் .
பயணக்களைப்பில் இருக்கிறாய் அல்லவா ?"
"ஒகே " என்று பின்னால் சாவகாசமாய் சாய்ந்து இவன் கேட்டான் .
" உன் பெயர் என்ன ?"

அவன் சொன்னான்.
" B C KANG "
?????

ஆம் அந்த காத்திருந்தவன் , அட்டை பிடித்தவன் , விமானத்தில் புகைக்க முடியாது அதனால் அவர்கள் இறங்கியவுடன் செய்வது புகைப்பதுதான் என்று தெரிந்து வைத்தவன் , வந்த பயணியின் சுமையை கையில் எடுத்துக் கொண்டவன் , தான் ஓட்டுனர் மாதிரி வந்த பயணியை பின்னால் வசதியாக உட்கார சொன்னவன் ...சாட்சாத் அந்த பரந்தாமனே .மன்னிக்கவும் அந்த மனிதனே .

கடைசி நிமிடத்தில் கம்பெனி பிரதிநிதிக்கு வேறு வேலை வந்து விட்டதால் தானே ஏர்போர்ட்க்கு வந்தேன் என்கிறார் .. எளிமை எளிமை எளிமை ...பேச்சு , செயல் , சிரிப்பு , அசைவுகள் எல்லாமே எளிமை .
சார் என இவன் விளிக்க "call me kang " என்கிறார்.இவனை விட வயதில் பெரியவர் 13 வருடங்கள் .

அந்த B C KANG தான் இவனின் வாழ்க்கையை மாற்றி போடுகிறார் . . இவனை அவருக்கும் அவரை இவனுக்கும் பேசப்பேச பிடித்துவிடுகிறது . வரும் நாட்களில் , வருடங்களில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் .வியாபாரம் , உலகம் , சரள ஆங்கிலம் , எழுதும் முறை , பேசும் முறை , உண்ணும் முறை , குடிக்கும் முறை எல்லாவற்றையும் அவர் இவனுக்கு கற்றுக் கொடுக்கிறார் .இவனிடமும் சிலவற்றை கற்றதாக அவர் சொல்கிறார் .

நாளைடவில் நெருங்கிய நண்பர்கள் ஆகி... வாலே போலே என்றளவு ஆகி விட்டார்கள் இருவரும் .( come lah , go lah என்பார்கள் சிங்கப்பூர் காரர்கள் )
கங் சொல்வான் அடிக்கடி " பணத்துக்காக வேலை செய்யாதே . நல்ல பெயர் போயிடும் . நல்ல பெயருக்காக வேலை செய் . பணம் வரும் "...
தீடிரென்று தனக்குத்தானே சியர்ஸ் சொல்லிக்கொள்வான் கங்
" பணம் என்பது ஒரு கிளை விளைவு ( BY -PRODUCT ) குழந்தை மாதிரி .கலவியில் இன்பம்தான் முக்கியம்.இன்பமாய் இருந்தால் குழைந்தை நிச்சயம் " என்பான். ஒரு கெட்ட வார்த்தை பேச மாட்டான்.

இவனும் வேலையை , தொழிலை நல்ல பெயரோடும் , இன்பமாய் அனுபவித்தும் செய்தான் . கங் சொன்ன மாதிரி பணம் வந்தது. (வருமான வரி எல்லாம் ஒழுங்கா கட்டிறான் .மேல படிங்க )

இவனும் , கங்கும் சந்தித்து நாளையோடு 11 வருடங்கள் ஆகிறது . ஒரு boss என்ற உருவத்தை இவனிடம் அல்ல ..எவரிடமும் காட்டியதில்லை கங்.
கங் எவ்வளவு பெரிய பணக்காரன் என்றால் ...அவனிடம் உள்ள கார்களில் ஒன்று ROLCE ROYCE .

இவன் இப்போது சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டு இருக்கிறான் .அவ்வப்போது அவன் முதலாளி , பிறகு நண்பன் ஆகி விட்ட B C KANG கோடும் சேர்ந்து வியாபாரம் செய்கிறான் .இந்த ஞாபகங்களை இரண்டு நாட்கள் முன்னம் இவன் வாட்சப்பில் அனுப்பினான் கங்குக்கு.

கங் அரை மணி நேரம் கழித்து பதில் அனுப்புகிறான் ." இதை நாம் கொண்டாடுவோம் . 10ஆம் தேதி உன்னை பார்க்க இந்தியா வருகிறேன் "
இவன் மகிழ்ச்சியில் அழைப்பு செய்து ... see you at airport என வைக்கிறான் .
பிறகு இவன் நண்பனுக்காக ஹோட்டல் அறை புக் செய்கிறான் . ஹோட்டல் காரர்கள் BC KANG க்கான அறை பதிவை உறுதி செய்து ...உங்கள் பெயர் என்ன? என முடிவில் கேட்கிறார்கள் .
இவன் சொல்கிறான் .
"ராம் வசந்த்"

எழுதியவர் : ராம்வசந்த் (9-Oct-14, 10:37 am)
பார்வை : 201

சிறந்த கட்டுரைகள்

மேலே