நீதானே என் பொன்வசந்தம்
காற்றாய் வந்து கவியுரைத்தாய்
நாற்றாய் எழுந்து கரம்பிடித்தாய்
ஊற்றாய் வந்து சுகம்கொடுத்தாய்
உறவாய் என்னை சிறைபிடித்தாய்...
இரவும் பகலும் எனை நனைத்தாய்
இதய வானில் சிறகடித்தாய்
விழிகளினாலே எனை வீழ்த்தி
விரகதாபம் எனக்களித்தாய்...
ஆலம்விழுதாய் எனில் முளைத்தாய்
ஆடிமழையாய் எனில் குதித்தாய்
ஓடும்நதியாய் எனில் நுழைந்தாய்
ஆடும்ஜதியாய் எனில் எழுந்தாய்...
புதிராய் எனக்குள் நீ உதித்தாய்
புதிதாய் அதற்கொரு பொருள்கொடுத்தாய்
பதராய் இருந்த என்மனதில்
கதிராய் வந்து ஒளிகொடுத்தாய்...
பட்டாய் எனக்காய் நூலிழைத்தாய் - புது
பாட்டாய் என்னை வசீகரித்தாய்
கட்டாய் என்னை கட்டியெடுத்தாய் - சிறு
சிட்டாய் என்னில் சிறகடித்தாய்...
முத்துக்குளிக்க எனை அழைத்தாய்
முத்தம் குளித்தே மூழ்கடித்தாய்
கொஞ்சிப்பேசி எனை அணைத்தாய்
கொலூசிடம் இரவெல்லாம் கதைபடித்தாய்...
சின்ன ஜிமிக்கியை ஆட்டிவிட்டாய்
சிறுக்கியை முறுக்கி உருக்கிவிட்டாய்
காதுமடல்களில் இதழ்பதித்து
கலவிக் கதைகளை நீ படித்தாய்....
கம்பன் காளி, வைரமுத்தும்
கண்ணதாசனும் கவிஞர்களும்
கணவனின் கவிதையில் தோற்றார்கள் - அவன்
கற்பனையினிலே சிறுத்தார்கள்...!
பிரியாராம்.