தொலைந்த தீப ‘ஆவளி’
![](https://eluthu.com/images/loading.gif)
தீப ஆவளி-க்கு அதாங்க தீபாவளிக்கு இன்னும் கொஞ்சநாள் தான் இருக்கு….இன்னைக்கு அந்த ’’ தீப ஆவளி ‘’ பற்றி தான் உங்கக்கிட்ட பேசப்போறேன்….சரி தீபாவளி-னாலே நமக்கு எது முதல்ல ஞாபகம் வரும்……???????? ஹ்ம்ம்ம் நல்ல சத்தமா கேட்குது நீங்க சொல்லுறது……கண்டிப்பா நமக்கு பட்டாசு தான் முதல்ல ஞாபகம் வரும்….இன்னைக்கு அதப்பத்தி தான் முக்கியமா பேசப்போறேங்க….சரி இந்த தீபாவளி எப்படி வந்துச்சு??????? கண்டிப்பா இங்க இருக்குற முக்காவாசிப்பேருக்கு தெரிஞ்சு இருக்கும்…. இருந்தாலும் இன்னும் நமக்கு தெரியாத பலக்காரணங்கள் இருக்கு…. அதப்பத்தியும் கொஞ்சம் பார்ப்போம்…. அப்பதான் நமக்கு பட்டாசு நம்ம நாட்டுக்குள்ள எப்படி வந்துச்சு-னு புரிஞ்சிக்கமுடியும்…ஏன்னா இந்தப்பதிவோட மையப்பொருளே பட்டாசு தாங்க….
சரி தீபாவளி –யோட உண்மையான பேரு என்ன தெரியுமா??? ”தீப ஆவளி” தாங்க…. இந்த ”தீப ஆவளி” தான் ”தீபாவளி” -யா இன்று மறுவி அழைக்கப்படுது….அதென்ன தீப ஆவளி ???? தீபம் –னா ஒளி , விளக்கு….ஆவளி –னா வரிசை…. அதாவது தீபங்களை வரிசையா ஒளியேற்றி இருள் நீக்கி கொண்டாடும் பண்டிகையா தான் தீபாவளி இருந்துச்சு…..அதுக்கு காரணமும் இருக்கு…. அந்த தீபத்து-ல பரமாத்மாவும் , நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவாத ஐதீகமாம்…கண்டிப்பா நம்ம எல்லார் மனசுலையும் ஒரு சில இருட்டு-னு சொல்லுற தப்பான எண்ணங்கள் சிறிதளவாது இருக்கும்….அதாவது அகங்காரம் , பொறாமை , தலைக்கணம் , அதீதக்கோபம்……அதுல எதையாவது ஒன்னையாவது அன்னைக்கு அகற்ற முயற்சி பண்ணணும்….இதாங்க தீபாவளியோட முக்கிய கரு….
இந்த தீபாவளிய நம்ம இந்துக்கள் மட்டும் கொண்டாடல…. சீக்கியர்கள் , சமணர்கள் மற்றும் பெளத்தவர்களும் கொண்டாடுறாங்க……ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கு…….சரி கொஞ்சம் அது என்னனு பார்ப்போம்…
இந்துக்களில் தீபாவளி கொண்டாட காரணம்
----------------------------------------------------------------------
நம்ம புராணப்படி ஒரு காலத்துல ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டானாம்....தேவர்களின் முறையீட்டின் படி மகா-விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்......விரித்த உலகம் (பூமி) கூர்ம அவதாரம் எடுத்த விஷ்ணு-வுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது....... ஆசைக்கு இணங்கி விஷ்ணு பூமி-யுடன் கலவி செய்த பயனாய் பூமித்தாய் கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றெடுத்தாள்..... பின் அவன் காமரூப நாட்டின் மன்னன் ஆனான். படைப்புக் கடவுளான பிரமாவை நோக்கி கடும் தவம் செய்து பல வரங்களைப் பெறுகிறான்..... அதன் பின் தேவர்களை அவன் துன்புறுத்துகிறான்.... துன்பத்தைப் பொறுக்க முடியாத தேவர்கள் வைகுண்டத்தில் திருமாலிடம் சென்று முறையிடுகிறார்கள்.... திருமால் வழக்கம் போல் தேவர்களைக் காக்க திருவுள்ளம் கொள்கிறார்....ஆனால் நரகாசுரனை கொல்வது திருமாலுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை..... காரணம் நரகாசுரன் தனது தாயின் கையால் அல்லாது வேறுயாராலும் கொல்ல முடியாதபடி ஏற்கனவே பிரம்மாவிடம் வரம் வாங்கி விட்டான்..... உடனே காத்தல் கடவுளான திருமால் பெரிய சதித் திட்டம் தீட்டுகிறார்......... தனது தேர்ச்சாரதியாக இரண்டாவது மனைவியான சத்தியபாமாவை (பூமாதேவியின் மறுஅவதாரம்) அமர்த்துகிறார்..... நரகாசுரனோடு நடக்கும் சண்டையின் நடுவில் அம்பு ஒன்று அவரைத் துளைக்கிறது..... உடனே திருமால் மூர்ச்சை போட்டு விழுந்து விடுகிறார்..... ஆனா உண்மையில் அப்படி அவர் மூர்ச்சைபோட்டு விழவில்லை.... எல்லாம் நடிப்பு.... இதனை விளங்கிக் கொள்ளாத சத்தியபாமா தனது கணவன் உண்மையிலேயே மூர்ச்சையாகி இறந்து விட்டார் என நினைத்து திருமாலின் வில்லை எடுத்து நரகாசுரன் மீது அம்பு எய்தி அவனைக் கொன்று விடுகிறார்.....உயிர் போகும் தருவாயில் நரகாசுரனிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று சத்தியபாமா கேட்கிறார்..... ”எனது மறைந்த நாளை மக்கள் எல்லோரும் கொண்டாட வேண்டும்”" என்கிறான் நரகாசுரன்.
இதனால் தான் நாம் தீபாவளியைக் கொண்டாடுகின்றோம்….
இன்னும் இரண்டு காரணங்களும் தீபாவளிக்கு காரணமாக இருக்கலாம் என வரலாறு கூறுகின்றன…அவை…
-> இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.
-> ஸ்கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.எனவே இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகின்றது.....
என்னதான் பலக்காரணங்கள் இருந்தாலும் நாம நரகாசுரன் இறந்த நாளாக் கருதி தான் கொண்டாடுறோம்....சரி இந்த சீக்கியர்கள் , சமணர்கள் , பெளத்தவர்கள் –லா எதுக்காக கொண்டாடுறாங்க...வாங்க அதையும் சொல்லுறேன்......
சமணர்கள் தீபாவளிக்கு காரணம்
----------------------------------------------------
சமணர்களோட இறுதி தீர்த்தங்கரர் மகாவீரர் மோட்சம் அடைந்த தினத்தையே அவுங்க தீபாவளியாகக் கொண்டாடுறாங்க. மற்றொருக் காரணம் மகாவீரரின் மூத்த சீடரான கணாதர கௌதமர் என்பவர் கேவல ஞானம் அடைந்த தினமும் தீபாவளி என அவுங்களா-ல கூறப்படுது.
இன்னொரு முக்கியமான விஷயங்க...........................
தீபாவளி பற்றிய மிகப் பழமையான குறிப்பு நம்ம சமண நூல்-ல தான் முதல்-ல இருக்கு…. ஆச்சார்யா ஜினசேனர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் எழுதிய சக சம்வதம் என்னும் நூல் –ல தான் முதன்முறையாகத் தீபாவளிக் குறித்த தகவல் இருக்குதாம்….
ஆக இதுல இருந்து என்னத்தெரியுது தீபாவளி ஏழாம் நூற்றாண்டு-ல இருந்தே கொண்டாடப்படுற மிகப்பழமையான பராம்பரிய பண்டிகைங்க……
சீக்கியர்களின் தீபாவளிக்கு காரணம்
----------------------------------------------------------
சீக்கிய மக்கள் தீபாவளி-யை மிக முக்கியத் தினமா கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான, குரு அர்கோபிந்த் சிங்க என்பவர் சிறையில் இருந்து விடுதலையான தினத்தை தீபாவளியா கொண்டாடப்படுவதா கருதப்படுகிறது.
பௌத்தர்களின் தீபாவளிக்கு காரணம்
------------------------------------------------------------
பௌத்த மதத்துக்கும் தீபாவளிக்கும் முக்கியமான தொடர்புகள் எதுவும் இல்ல... ஆனாலும் தெற்காசியா-ல சில பௌத்தர்களால் தீபாவளி கொண்டாடப்பட்டு இருக்குது. முக்கியமாக நேபாளத்து-ல வாழுற பழங்குடி நெவார் புத்தர்கள் தீபாவளியைக் கொண்டாடி இருக்காங்க...
மிக முக்கியக்காரணம் –னு பார்த்தா நம்ம அசோக மாமன்னர் பௌத்த மதத்துக்கு மதம் மாறிய தினத்த தான் தீபாவளியாகக் கொண்டாடப்படுகின்றது.....இந்தத் தினத்தை அசோக விஜயதசமி-னு அழைக்குறாங்க.
இப்ப நா சொன்ன விஷயத்துல முக்கியமான விஷயத்த கவனிச்சீங்களா????
இப்ப சொன்ன (இந்துக்கள் , சமணர்கள் ,சீக்கியர்கள் மற்றும் பெளத்தவர்கள்) இவுங்க எல்லாரும் தீபாவளிய பட்டாசு வெடிச்சுக் கொண்டாடம தீபங்கள் ஏற்றி தான் கொண்டாடி இருக்காங்க….. அப்ப இந்த பட்டாசு எப்ப எப்படி வந்துச்சு???? யாரு கண்டு பிடிச்சா??? நம்ம நாட்டுக்குள்ள யாரு கொண்டுவந்தா???????
சீனர்கள் தான் முதன் முதலா இந்த பட்டாச கண்டுபிடிச்சாங்க….அதுக்கு காரணம் வெடி சப்தம் பேய் பிசாசுகளை விரட்டும் –னு அவுங்களுக்கு ஒரு மூடநம்பிக்கை…….இந்த பட்டாசு வெடிக்க தேவையான முக்கிய வெடிபொருள் கண் பவுடர். இது கண்டு பிடிக்கப்பட்டது 1799 -ல் தான். அதன்பிறகே தற்போதைய பட்டாசு வந்தது…. ஆனா அதுக்கு முன்னாடி, 10 ம் நூற்றாண்டில், வேறு வகையான மர எரிபொருளை மூங்கில் உள்ளே அடைத்து அதை வெடிக்க வச்சு தான் முதல்ல 'பட்டாசு' கண்டு பிடித்தனர்…
ஆனா போக போக அது சிலப்பேருக்கு கேலிக்கூத்தா பொழுதுப்போக்கா ஒரு குதூகலத்த தந்துச்சு….அதோட விளைவு சீன புது வருட பண்டிகைக்காக பட்டாசு வெடிக்க ஆரம்பித்தனர். அது அப்படியே உலகம் முழுக்க கொஞ்சம் கொஞ்சமா அவரவர் நாட்டு பண்டிகையிலும் அறிமுகம் ஆனது.. இன்னைக்கு உலகம் முழுக்க டிசம்பர் 31 இரவு முதல் ஜனவரி 1 அதிகாலை வரை பட்டாசு வெடிக்கப்படுது.......! ஆனா நம்ம நாட்டப் பொறுத்த வரை, தீபாவளி-ல தான் பட்டாசு அதிகம்..!
சரி இந்த பட்டாச நம்ம நாட்டுக்குள்ள முதன் முதலா கொண்டுவந்தவர் யாரு-னு தெரியுமா??? வரலாறு பேசும் ஒரு மன்னர் தாங்க அறிமுகப்படுத்துனாரு….அவர் வேற யாரும் இல்ல நம்ம முகலாய மன்னர் அக்பர் தாங்க….அவர் தன்னோட அரசவை-ல தீபாவளி கொண்டாடியத ”அய்ன் அக்பர்” என்ற நூல் நமக்கு சொல்லுது…..அவரே தான் முதன் முதலா பட்டாசு வெடிக்கும் முறைய அறிமுகப்படுத்தி இருக்காரு….
இப்படி இந்தியாவுக்குள்ள ஊடுருவிய பட்டாசு தீபாவளி பண்டிகையில மட்டும் அசைக்கமுடியாத இடத்த பிடிச்சுடுச்சு…அதானால தான் தீபாவளி நேரத்துல மட்டும் நம்ம நாட்டுல நிறைய பட்டாசு விற்கப்படுது , வாங்கப்படுது…..
இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசு-ல 90 விழுக்காடு சிவகாசி-யில தான் உற்பத்தி செய்யப்படுகிறது..... இப்படி 90 விழுக்காட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசின் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு கரியாகி விடுகிறது. இந்த ஒரு நாள் கூத்துக்காக சிவகாசி வருடம் முழுக்க உழைக்குது –னு சொன்னா என்னத்த சொல்ல...
பந்தை பிடித்து விளையாட வேண்டிய பிஞ்சுக்கரங்கள் பட்டாசு செய்துக்கொண்டிருப்பது வேதனையான விஷயம்….
பட்டாசு தயாரிக்கும் பொழுது நேரும் விபத்துக்களாலும், பல வித நோய்களாலும் பலக் குழந்தைகள்
மரணமடைகின்றனர்.
குழந்தை தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள் தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களை அதிக அளவில் புகுத்த காரணம், இவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுத்து நிறைய வேலை வாங்கலாம். ஒரு நாள் முழுக்க ஒரு குழந்தை பட்டாசு செய்தால் அதிகபட்ச சம்பளாமாக 30-50 ரூபாய் கிடைக்கும். 50 என்பதே கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட தொகை தான்.பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சென்று தான் வேலைப்பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே இருந்து பட்டாசு செய்யலாம். அப்பதான தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை-னு வெளிஉலகுக்கு காட்டி பட்டாசு தொழிற்சாலை முதலாளி முதலைகள் தப்பித்துக்கொள்ளலாம்......
பட்டாசு செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் கூட இருக்காது. வீட்டின் அடுப்பறை நெருப்பு பட்டாசு மேல் பட்டு பல நேரங்களில் பல மழலைகள் இறந்து போகின்றனர். இங்கு நடக்கும் பல விபத்துக்கள் மூடிமறைக்கப்படுகிறன. ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் சில விபத்துக்களாவது சிவகாசியில் நடக்கும். ஆனால் வெளியூலகுக்கு தெரியாமல் மூடி மறைக்கப்படும்.
இதுமட்டும் இல்லாம கர்ப்பமா இருக்குற ஒரு பெண்ணுக்கு அவளோட மட்டும் இல்லாம அவள் சிசுக்கும் அந்த பட்டாசு மருந்தா-ல பாதிப்பு இருக்கு.... அந்த பட்டாசு தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மாசுபட்ட கழிவு நீர் நிலத்தடிநீரையும் மண்ணையும் சீர்கெடுக்கிறது......
அத்தோடு இல்லாம, இந்த ரசாயண நச்சு வாயுக்கள் , காற்றையும் மாசுபடுத்தி பல்வேறு நோய்களை அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவோருக்கும் சுற்றுப்புற மக்களுக்கும் சுகாராத சீர்கேட்டை ஏற்படுத்தும். ஒன்னு மட்டும் நிச்சயங்க நாம வாங்குற ஒவ்வொரு பட்டாசும் பலப்பேரோட வாழ்க்கைய அழிச்சு அவுங்க உடல்நிலைய பாதிச்சு தான் நம்மகிட்ட வந்து சேர்கிறது…
"125 டெஸிபலுக்கு மேலுள்ள வெடிகளை வெடிக்கச்செய்தால் அவர் 1986-ம் ஆண்டு சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றவாளி ஆவார்"
நம்ம காசு..! நம்ம இஷ்டம்தான்..!
ஆனா, திடுக்கிடும் படியாக அதிக சப்தத்துடன் பட்டாசு வெடிப்பது... வயோதிகர், பச்சிளங்குழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர், தூங்குபவர்கள், பட்டாசு விரும்பாதோர் இவர்களின்... அமைதியான சூழல் என்ற தனிமனித உரிமைக்கு எதிரா இருக்கு…..காரணம் சாதாரண நாட்களில் தோராயமாக 30 டெஸிபல் வரையுள்ள சப்தங்களையே நாம கேட்கிறோம். திடீர்னு ஒரு நாள் மட்டும் இத்தனை டெசிபல்களை எப்படி நம்ம காதுகள் ஏற்றுக்கொள்ளும்….முக்கியமா வயசானவங்க பிறந்த குழந்தைகளுக்கு ரொம்ப பிரச்சனையா இருக்கும்….
சரி, யார் கஷ்டப்பட்டா நமக்கென்னனு கவலை படாமல் வெடிக்கிறோம்..! ஆனா இப்படி வெடிக்குற பட்டாசு-ல என்ன வேதிப்பொருள் இருக்கு-னு யாருக்காவது தெரியுமா????... அது வெடிச்சு புகையாக, சாம்பலாக நிலத்திலும், நீரிலும், காற்றிலும் கலந்து எப்படி மாசு படுத்துகின்றன என்று தெரியுமா???????????
ஆண்டிமோனி சல்பைடு, ஆர்செனிக், பேரியம் நைட்ரேட், காப்பர் காம்பவுண்ட், ஹெக்சா குளோரோ பென்சின், லெட் காம்பவுண்ட், லித்தியம் காம்பவுண்ட், மெருகுரஸ் குளோரைடு, நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைட், ஓசோன், சோடியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், அயர்ன் பவுடர், மேக்னீசியம் பவுடர், ஸ்ட்ரோன்ஷியம் நைட்ரேட், பொட்டாசியம் பெர்குலோரெட், பொட்டாசியம் குளோரேட், பொட்டாசியம் நைட்ரேட், ஆகிய கலவைககள் அதிக அளவில் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மிக அதிக அளவிலான நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. இவை எல்லாமே சுற்றுப்புறச்சூழலை
மாசுபடுத்துகின்றன........
இவற்றை சுவாசிப்போருக்கு... சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நுரையீரல் கேன்சர், சரும வியாதி, கண் நோய், தைராய்டு கோளாறு.. என்று இதனைச் சுவாசிக்கின்ற மனித இனத்திற்கு இது பெரும் உடல் நலக்கேட்டை ஏற்படுத்துகிறது. பச்சிளம் குழந்தை மற்றும் கருவில் உள்ள குழந்தையை கூட பாதிக்கிறது......
முக்கியமாக ஆஸ்துமாக்காரர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சிக்குரிய நாளாக இருக்கவே முடியாது.
நகரெங்கும் இண்டு, இடுக்கு, சந்து, பொந்து, என நீக்கமற நிறைந்து எங்கும் பரவிக்கிடக்கும் இந்த பட்டாசுக்
குப்பைக்கழிவுகளை தீபாவளியின் மறுநாள் காலை மலையளவு வேலையாக அவை அனைத்தையும் அப்புறப்படுத்தும் நகராட்சி/ஊராட்சி துப்புரவாளர்களை கொஞ்சம் நினைத்து பாருங்க..! பாவம் அவுங்க..! அவை அனைத்தும் நச்சுக்குப்பைகள்-னு அறியாமல் எவ்வித பாதுகாப்பும் இன்றி இராசாயன நச்சு நெடி தாங்காமல் இருமிக்கொண்டே... அவ்வேலையை செவ்வனே செய்து முடிக்கும் அவர்களைக்கண்ட பிறகாவது பட்டாசு கொளுத்துவது பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் ..!
இதுல வேற தீபாவளி அன்னைக்கு இரவு மழை பெய்தா கேட்கவே வேண்டாம். காற்றை மட்டுமே மாசுபடுத்திய பட்டாசு, அடுத்து நீர் நிலையை மாசு படுத்துகிறது. பட்டாசு வெடித்தபின்னர் மிகுந்து கிடக்கும் அத்தனை இரசாயன கழிவும் மழை நீரினால் அடித்துச்செல்லப்பட்டு குளம், ஆறு இவற்றில் கலக்க... நீர் வாழ்வன, அவற்றை உண்டு வாழும் நில வாழ்வன, பறப்பன என அனைத்தையும் பாதிக்கிறது பட்டாசு..! பின்னர் இந்த இராசாயன நீர் நிலத்தடியில் உறிஞ்சப்படுவதால் அதனை அருந்தி வாழும் மனிதர்கள், என்னதான் காய்ச்சி வடிகட்டி குடித்தாலும் நோய்க்குள்ளாகிறார்கள். நிலத்தில் வாழும் மண்புழுக்கள், தாவரங்கள் என்று அனைத்தும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. தாவரங்கள் பூப்பதும், காய்ப்பதும், வளர்வதும் தடை படுகிறது. விவசாயம் பேரிழப்பு அடைகிறது. நீர் மாசு படுகிறது.
சரி, இதையும்தாண்டி பட்டாசு வெடித்து அப்போது ஏற்படும் விபத்துக்கள்... அப்பப்பா... சொல்லி மாளாதே..! கண்ணிழந்தோர், கையிழந்தோர், காலிழந்தோர், மேனி எரிந்தோர், முகம் விகாரமானோர், தீப்பற்றி எறிந்த வீடுகள், பட்டாசுக்கடைகள், மனித உயிரிழப்புகள், பொருளாதார நாசம்... என வருடா வருடம் இவையெல்லாம் எத்தனை எத்தனை..?இன்னுமா நாம் பட்டாசு வெடிக்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு விற்க வேண்டும்..? இன்னுமா நாம் பட்டாசு தயாரிக்க வேண்டும்..?
இப்ப சொல்லுங்க இப்படி ஒரு தீபாவளி பட்டாசு வெடிச்சு கொண்டாடனுமா ???????? கொஞ்சம் யோசிச்சு பாருங்க….நீங்க கேக்குறது புரியுது…நான் ஒரு ஆள் மாறுனா எல்லாம் மாறிடுமா-னு யோசிக்குறீங்க சரிதான ???? முதல்ல நாமா மாறனும் பின்னாடியே நம்மல பார்த்து நாலுப்பேரு மாறுவாங்க…..நாம எல்லாருக்கும் ஒரு நல்லவழிகாட்டியா இருப்போம்… இப்ப சொல்லுங்க நீங்க வழிகாட்டியா இருக்க போறீங்களா??? இல்ல சுயநலத்துக்காக பிறர் வாழ்க்கைய அழிக்க போறீங்களா ????? நா ஒரு வழிகாட்டியா கடந்த இரண்டு வருடமா பட்டாசு வெடிக்குறது இல்ல…. என் வீட்டுலையும் எதிர்ப்பு தான்… ஏன் லூசு-னு கூட திட்டுனாங்க…ஆனா நா அதெல்லாம் காதுல வாங்கிக்கல…ஏதோ என்னால முடிஞ்சத செய்யுறேன்….முடிஞ்சா நீங்களும் முயற்சி பண்ணுங்க…இப்படியே நம்ம எல்லாரும் பட்டாசு வெடிக்குறத நிப்பாட்டிட்டா சிவகாசி-ல பிஞ்சு குழந்தைகள் வாழ்க்கை-ல இருக்க இருள் கண்டிப்பா நீங்கும்……..என்னப்பொறுத்தவர அப்பதாங்க அது உண்மையான தீபவாளி...... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு…… உங்க நண்பர்களுக்கும் எடுத்து சொல்லுங்க….
தீபங்களை ஏற்றி கொண்டாடும் தீப ஆவளியை மட்டும் வரவேற்போம்…..
குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்து....யாரையும் வற்புறுத்தவில்லை....விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இங்கு பகிர்கின்றேன்....
சில தகவல்கள் முஹம்மத் ஆஷிக் என்ற நபரின் பிளாக்ஸ்பாட்-டில் இருந்து இங்கு ஷார் செய்யப்பட்டுள்ளது....