மனநலம் குன்றியோர், மனிதநேயம் மிக்கவர்கள்
மனநலம்குன்றிய குழந்தைகளின் இடர்ப்பாடுகளை எளிதாக்கிடுவோம்,
தன்னால் என்ன செய்யமுடியுமோ அதை செய்ய வைத்திடுவோம்,
தானாக தினசரி நடவடிக்கைகளை செய்துகொள்ள வைத்திடுவோம்,
திறனுக்கேற்ற கல்வி, திறமைக்கேற்ற பயிற்சி தந்திடுவோம்
சிறப்புக் குழந்தைகளின் பள்ளியே சிறந்தொரு கோயில்
சிறப்புக் குழந்தைகளே கண்கண்ட தெய்வங்கள்
நம்மை சிரிக்கவைப்பதும் சிந்திக்க வைப்பதும்
நம் கவலைகளை மறக்க வைப்பதும் இக்குழந்தைகளே!
நல்லது நடக்க எதிரே வருவது யாரெனப்பார்ப்பது வழக்கம்
நான் எதிர் பார்ப்பதெல்லாம் சிறப்புக் குழந்தைகளை மட்டுமே!
கஷ்டம் வரும்போது கோவில் தேடிப் போவார்கள்
நான் தேடி வருவது இக்குழந்தைகளின் இருப்பிடம் மட்டுமே!
மனநலம் குன்றியோரை, தாழ்வாக நினைப்பவர்கள்
மனமே இல்லாத மனிதர்கள், மனிதர்களே இல்லையம்மா !
உங்களுடைய இரக்கம் தேவையில்லை அவர்களுக்கு,
உங்களில் ஒருவராக நினைத்தாலே போதும்!
மனநலம் குன்றியோர், மனிதநேயம் மிக்கவர்கள் !
மனமாற சொல்கின்றேன், குணத்திலே கோபுரமானவர்கள் !
பழகிப் பாருங்கள், பாசமும் நேசமும் மிக்கவர்கள் !
வாழ்ந்திட, வளர்ந்திட, கைகொடுத்து உதவிடுங்கள் !
இவர்கள் வேறு யாருமல்ல, நம்மவர்கள் தான்,
இவர்களுக்கு உதவினால், நீங்கள் உயர்ந்திடுவீர்கள் !
இவர்கள் மகிழ்ந்தால், உங்கள் குடும்பம் உயர்ந்திடும் !
இவர்களை நினைத்தால், இறைவன் உங்களுடனிருப்பான் !