உணர்வலையில் எழுந்த உற்சாக பெருவெள்ளம் -சந்தோஷ்

பழனிகுமார் அய்யாவின் நூல் வெளியீட்டு விழாவை பற்றி ஒரு சிறப்பு ரிப்போர்ட் ..!


புத்தகம் வாசித்தல் என்பது உள்ளார்ந்த உணர்வுகளை எழுப்பி நம் சிந்தனைகளில் பெரும் மாற்றங்களை நிகழ்த்திடும். வாசிப்பு என்பது பொழுப்போக்கு என்பதனையும் தாண்டி நமக்குள்ளிருக்கும் எதாவது ஓர் ஆற்றலை ஏதோ ஒரு தருணத்தில் வெளிக்காட்டியே தீரும்.

ஒன்றுமில்லை... !
அதிகம் யோசிக்க கூட வேண்டாம்..!

நண்பர்களுடன் கூடி அரட்டை அடிக்கும்போது, வாதம் , எதிர்வாதம் எழும் போது நம் சொந்த கருத்துப்போல ஆணித்தரமாக அழுத்தமாக பேசி நண்பர்களிடம் பாராட்டு வாங்கிவிடுவோம் அல்லவா..? அந்த பாராட்டுகளை பெற நமக்கு ஆதாரமாக இருந்திருக்கும்.. என்றைக்கோ இரயில் பயணங்களிலும், காத்திருப்பு நேரங்களிலும் நாம் பொழுப்போக்குக்காக படித்த ஏதோ ஒரு சில புத்தகம்.

ஆக புத்தகம் வாசித்தவனே இப்படி சிந்தனைவாதி என்றும், எல்லாம் எமக்கு தெரியும் என்று அலட்டிக்கொள்ளும் போது, புத்தகத்தை எழுதும் எழுத்தாளரின் திறனை நினைத்துப்பாருங்கள். எத்தனை விஷயங்களை உற்றுநோக்கியிருக்க வேண்டும் ?!!!..

ஒரு போலீஸ்காரரின் விசாரணை
ஒரு பத்திரிக்கைக்காரரின் நுணக்கம்
ஒரு வழக்கறிஞரின் புத்தி
ஓர் ஆராய்ச்சாளரின் நுண்ணறிவு
என்று பலவிதத்திலும் பலவிஷயங்களை பலதுறைகளிலும் அறிந்து, தெளிந்து, சிந்தித்து கவிதை, கதை என்று எதை எழுதினாலும், எழுதியதை வாசகருக்கு சென்றடையும் வகையில் ரசிப்புத்தன்மையோடு எழுதுவது அவ்வளவு சாதாரணம் விஷயம் அல்ல. எழுத்தாளர் என்று எளிதாக எவரும் உருவாகிடமுடியாது. எழுத்தாளருக்கு எவரையும் விட சமூகத்தை காப்பாற்ற, சமூகத்தை எடுத்துக்காட்ட, பாதிப்பை நிவர்த்தி செய்ய, தீர்வு சொல்ல அதிக பொறுப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட பொறுப்பான திறமையான நுணக்கமான எழுத்தாளரின் ஒரு நூல் வெளியீட்டு விழாவிறகு கடந்த 12 ம் தேதி சென்றிருந்தேன்.

நூலின் பெயர் : உணர்வலைகள்
நூலின் ஆசிரியர் : திரு பழனிகுமார்.

-------------------------
கவிஞரை பற்றிய என் உணர்வலைகள் :

திரு. பழனிகுமார்..!

எழுத்து.காம் என்ற இணையதளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர். அனைவருக்கும் நல்ல நண்பர். அன்பானவர். பகுத்தறிவு சிந்தனையாளர். இவையாவும் இவரின் அடையாளங்கள். இந்த அடையாளங்களை என் மனதில் அச்சிட வைத்தது இவரின் கவிதைகள். பெரும்பாலும் சமூகத்தை பற்றியே எழுதியிருப்பார். சமூகம் என்றால் நம்மில் பலர் நம்மை சுற்றியே சிந்தித்து எழுதுவோம் . ஆனால் இவர் “ மனிதனே சமூகம்; சமூகம் என்பதே மனிதன் தான் “ என்ற பரந்து விரியும் பார்வையில் எழுதிக்கொண்டிருக்கும் ஓர் அற்புத கவிஞர். இவரோடு இணைந்து இந்த தளத்தில் சக படைப்பாளியாக நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். சற்று கர்வமும் கூட. இந்த எழுத்து தளத்தில் இதுவரை இவர் கவிதைகளினால் கருத்துகளினால் யாரிடமும் முரண்பட்டது இல்லை. அந்த அளவிற்கு நட்பின் வலிமையை அறிந்து, அன்பை வெளிக்காட்டக்கூடிய நல்ல மனிதர். பகுத்தறிவு, நாத்தீகம் என்ற இவரின் கொள்கையிலிருந்து எந்த கவிதையிலும் எந்த கருத்திலும் சற்றும் இடறி , தடம் மாறியிருக்கமாட்டார். அந்த அளவிற்கு தெளிவான சிந்தனை. ஆனால் ஒன்று இவர் அடிக்கடி ஒரு பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார். தனக்கு வயதாகிக்கொண்டிருக்கிறதுஎன்று..... !
. நேரில் சந்தித்தபோதுதான் தெரிந்தது கவிஞருக்கு எப்படியும் அகவை 30 தாண்டி இருக்காது.

விழாவில் சில உணர்வலைகள்:
--------------------------------------

விழா தொடங்குவதற்கு முன் ஒரு காணொளி காண்பிக்கப்பட்டது. கவிஞரின் வாழ்க்கை குறிப்பு..!

வங்கியில் வேலைப்பார்க்கும் போதே இலக்கிய ஆர்வம். நண்பர்களுடன் கவிதை பகிர்தல் என கவிஞரை பற்றி கேள்விப்படாத பல அரிய தகவல்கள் .
எத்தனை எத்தனை பெரிய மனிதர்களுடன் பழகியிருக்கிறார். பழகிக்கொண்டிருக்கிறார். பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் என்று தொடங்கி இயக்குநர் விசு (கவிஞரின் குடும்ப நண்பர்), பிரபல மருத்துவர்கள், பிரபல எழுத்தாளர்களுடன் நெருக்கம் என பல தகவல்களோடு விழியை விரிய வைத்தது பழனிகுமார் அவர்களின் வாழ்க்கை குறிப்பு. இப்படிப்பட்டவரா மிகவும் இயல்பாக இந்த தளத்தில் நம்முடன் பழகிக்கொண்டிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்ட தருணம் அது.

இந்த காணொளியில் கவிஞரை பற்றிய உரை வாசித்த ஒரு கம்பீர குரல் என்னை வெகுவாக கவர்ந்தது. அது நம் எழுத்து தளத்தின் கவிஞர் தோழர் சுந்தரரேசன் புருஷோத்தமனின் குரல். தெளிவான உச்சரிப்பு. அருமையான குரல்வளம்..!

அடுத்து,

தமிழ் தாய் வாழ்த்து....!
சரி எப்போதும் போல ஒரு இசைத்தட்டு சுழன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் என்று எதிர்பார்த்த தருணத்தில் மீண்டும் ஆச்சரியம். நம் எழுத்து தளத்தின் கவிஞர்கள் அம்மா. திருமதி சியாமளா ராஜசேகர் அவர்கள் , அக்கா . திருமதி சொ. சாந்தி அவர்கள் , தோழர் சுந்தரேசன் புருஷோத்தமன் அவர்கள் மற்றும் தோழி சஹானா தாஸ் அவர்கள் ஆகியோர் மிக அழகாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்தினார்கள்.

கவிஞரின் குடும்பத்தார் குத்துவிளக்கு ஏற்ற விழா இனிதே தொடங்கியது.

விழாவிற்கு என்று இருக்கும் சிலபல சம்பிதராயங்கள் முடிந்து, மேடையில் சிறப்பு விருந்தினர்களுடன் நமது கவிஞர். விழா ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு பிறகு விறுவிறு என்று ஒரு இளைஞர் மேடையேறினார். அவர் தோழர் அகன் அய்யா அவர்கள். அடுத்த சில நிமிடங்களில் ஒரு மரபு கவிஞர் புதுக்கவிதை வேகத்தில் மேடை ஏறினார். அவர் மரபுமாமணி திரு. காளியப்பன் எசேக்கியல் அய்யா அவர்கள்
( இனிமேல் இவர்கள் இருவரையும் வயதானவர்கள் யாராவது சொன்னால் நான் சண்டைக்கு வருவேன். நேர்ல போய் பாருங்க பாஸ்.. என்ன ஒரு துடிப்பா, இளமையா இருக்கிறாங்க தெரியுமா.)

மாண்புமிகு நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் புத்தகம் வெளியிட, முதல் பிரதியை பெற்றுக்கொண்டார் பொதிகை தொலைக்காட்சியின் கோவை மண்டல இயக்குநர், கவிஞர் திருமதி ஆண்டாள் பிரியதர்சினி அவர்கள்.

பூக்கள் தூவ., சந்தோஷ மழை பொழிய, அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்த கவிஞரின் சொந்தங்கள், கவிதை ரசிகர்களின் பலத்த கரவோலியில் புத்தகம் வெளியிடும் அந்த காட்சியை இதற்கு முன் நான் எங்கும் கண்டதில்லை. அரங்கத்தினுள் புத்தக வெளியீடும் அதே நேரத்தில் அரங்கத்திற்கு வெளியே சரவெடிகளின் படபடபட என்று வாழ்த்து வெடிச்சத்தம்..!


விழாவில சிறப்பு விருந்தினர்கள் பலரும் பேசினார்கள். பல பயனுள்ளதையும் சொன்னார்கள். அதில் திரு. அகன் அய்யா அவர்களின் உரையில் ஒரு நெருக்கம் உணர்ந்தேன். ” இந்த புத்தக விழா ஒரு திருமணவிழா” என்று சில எடுத்துகாட்டுகளுடன் சொன்னது அனைவரையும் நிச்சயம் கவர்ந்திருக்கும்.

அடுத்து மரபு மாமணி காளியப்பன் அய்யாவின் மரபுக்கவிதையை இதுவரை எழுத்தில் மட்டும் பார்த்த எனக்கு , முதன் முறையாக அவரின் குரலின் வழியாக பாடிய வாழ்த்துப்பா கேட்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு கவிதையை எந்த அளவிற்கு ஏற்ற இறக்கத்துடன் படிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தது அய்யாவின் கவிதை உரை.

(இடையில் சிலரின் பேச்சை கேட்கமுடியவில்லை. அகன் அய்யாவுடன் என்னோடு வந்திருந்த நம் தள நண்பர்களுடனும் சில நிமிடங்கள் அரங்கத்திற்கு வெளியே பேசிகொண்டிருதோம். அகன் அவர்கள் எனக்கும் மற்ற தோழமைகளுக்கும் தமிழன்பன் பற்றிய இரண்டு புத்தகம் வழங்கியது மகிழ்ச்சிகுரியது.)

பின்பு ,

இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் பேசிய போதுதான். அரங்கத்திலுள்ளவர்களையும் மேடையில் உள்ளவர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். விருந்தினர்கள் உரை நிகழ்த்தும் போது பார்வையாளர்கள் நாங்கள் அவ்வப்ப்போது நாகரீகம் (?) கருதி கைத்தட்டாமல் இருந்தோம். அப்போது தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த தோழி சஹானா, ”கைத்தட்டினால் படைப்பாளிக்கும் பேச்சாளர்களுக்கும் உற்சாகம் தரும் ”என்று சமயோசிதமாக பார்வையாளர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்தார். இதை டாகடர் சொக்கலிங்கம் குறிப்பிட்டு தோழியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கைத்தட்டினால் உடலிற்கு உண்டாகும் பலனை தனக்கே உரிய பாணியில் விளக்கி சொன்னது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ” கைத்தட்டல் என்பது ஓர் உடற்பயிற்சி , தற்காலிகமாக சோர்விலிருந்து மீளவைக்கும் , மூளைக்கு சிந்திக்கும் ஆற்றலை கொடுக்கும் “ என்று டாக்டர் சொல்ல சொல்ல அரங்கில் கைத்தட்டல் விண்ணை பிளந்தது.

இவரின் பேச்சில் ஒரு நகைச்சுவை. கடந்த முறை ஒரு விழாவிற்கு சென்றிருந்தாராம். விழாவில் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யவில்லையாம். அப்போது ஒலி அமைப்பாளரிடம் என்ன என்று வினவியப்போது அவன் சொன்னது “ சார் மைக் நல்லாருக்கு. ”ஸ்பீக்கர்” தான் கொஞ்சம் லூசு “ ..என்றானாம் ( பலத்த சிரிப்பொலியுடன் கைத்தட்டலகள் ) இங்கே இருபொருள் உள்ளதை அவர் சொல்லமாலே எங்களுக்கு புரிந்தது. (ஸ்பீக்கர் அதாவது பேச்சாளர் என இரு அர்த்தம் )

ஒருவன் மைக்கில் பேச ஆரம்பித்தால் அவனின் பேச்சை விரும்பிக்கேட்கும் அளவிற்கு பார்வையாளர்களை கவர வேண்டும். கைத்தட்டி போதும் உட்கார் என்ற சொல்லக்கூடிய நிலைக்கு பேச்சாளர்கள் இருக்ககூடாது, கைத்தட்டி இன்னும் இன்னும் பேசுங்கள் என சொல்லும் அளவிற்கு நம் உரை இருக்க வேண்டும் என்று அவர் பாணியில் சொன்னது சிந்திக்கவைத்தது.

அடுத்து கவிஞர் திருமதி ஆண்டாள் ப்ரியதர்சினி , நூல் ஆசிரியர் பெண்ணடிமை பற்றி எழுதியதை பாராட்டி சொன்னதோடு. பெரியாரும் பாரதியாரும் இல்லை என்றால் இந்த ஆண்டாள் பிரியதர்சினி இல்லை என்று அவர் சொன்னது எவ்வளவு உண்மை என உணரமுடிந்தது.



நீதியரசர் பேசும் போது கவிஞர் தன் புத்தகத்தில் நீதியை சாடிய விதத்தை குறிப்பிட்டு அதற்கு தன் விளக்கத்தை கூற முயன்றாலும் . “எழுத்தாளர்களுக்கு எப்போதும் ஒரு நாட்டினஸ் இருக்கும் . அதாவது பச்ச தமிழ்ல சொன்னா எகத்தாளம் இருக்கும் “ என்று அவர் சொன்னது குறிப்பிடதக்கது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்று நீதியரசர் பேசியது உற்சாகம் அளிப்பதாக இருந்தது.
ஆம் தானே ! எழுத்தாளன் என்ற திமிரு நமக்கு இருக்கத்தானே செய்கிறது. !!

கவிஞரின் ஏற்புரை மிகவும் அசத்தலாக இருந்தது. ஆனால் உன்னிப்பாக கேட்கமுடியவில்லை. ( பக்கத்தில் ஒரு மழலையின் அழுகை. என்னிடம் இருந்த ஒரே ஒரு டைரி மில்க் கொடுத்து அழுகையை நிறுத்த முயன்றேன், வாங்கியபிறகுதான் அதிகமாக அழுதது அந்த குழந்தை. இன்னொரு டைரி மில்க் வேண்டுமாம். நான் எஸ்கேப் ஆகிட்டேன். )

அக்கா சொ.சாந்தி அவர்கள் கண்ணதாசனின் கவிதைகள் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெகுநாட்களுக்கு முன் எனக்காக வாங்கி வைத்திருந்தார். சந்திக்க வாய்ப்பு கிட்டமால் அந்த புத்தகம் இந்த விழாவினால் அன்பு பரிசாக எனக்கு கிடைத்தது. ( தேங்கஸ் அக்கா )

இந்த விழாவில் தொகுப்பாளராக இருந்த நம் எழுத்து தளத்தின் தோழி சஹானா தாஸ் மிகவும் பாராட்டுப்படவேண்டியவர். அழகான கவிதையை நேர்த்தியாக உச்சரித்தோடு மட்டுமில்லாமல் அவ்வப்போது தீடிர் கவிதைகள் சொல்லி ரசிக்க வைத்தார்..
பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் என அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டார். குரல் வளம் அசத்தலாக இருந்தது. நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன், திருமதி ஆண்டாள் பிரியதர்சினி உள்ளிட்ட விழா சிறப்பு விருந்தினரும் பார்வையாளர்களும் தோழியை பாராட்டியது நமக்கும் பெருமிதமே.

சரியாக பேச வேண்டும், தவறு செய்திட கூடாது. என்று தன் மகளை கவனிப்பதை போன்ற அதே அக்கறையோடு சஹானா தாஸ்க்கு அறிவுறித்திப்படியே இருந்தாராம் அம்மா திருமதி சியமளா ராஜசேகர் . அம்மா என்றாலே கவனிக்காமல் அக்கறைப்படாமலா இருப்பார்கள். ?
அம்மா என்றால் சும்மாவா...!

அனைவரையும் கவர்ந்த சஹானா தாஸ் தொகுத்து பேசிய உரைகள் கவிதைகள் பல தோழர் வினோத் கண்ணனின் எண்ணத்தில் எழுந்தவை.
பாராட்டுக்கள் வினோத் கண்ணா.. ! என் நண்பா..!

இறுதியில் கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துப்பாடி கவிஞரின் பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தது ஆனந்தமான தருணம்.

பின்பு நூல் ஆசிரியரும் கவிருமான திரு பழனிகுமார் அய்யாவுடன் ஒரு க்ரூப் போட்டோ , வந்திருந்த எழுத்து தள தோழமைகளுடன் சந்திப்பு என மகிழ்ச்சியாக கடந்தது அந்த நிமிடங்கள். கல்லூரி மாணவர்கள் ஒன்றாக கூடி கேலி கிண்டல் செய்துக்கொள்வது போல பேசியதும் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் மிகவும் மகிழ்ச்சியான தருணம் .மறக்கமுடியா நிகழ்வு.!

அடுத்து எழுத்து தள தோழமைகளுடன் சிரித்து பேசி ஒன்றாக அறுசுவை விருந்து சாப்பிட்டது இன்னும் எனக்கு சுவைக்கிறது என் இதயத்தில். என் நினைவில்...!



--------------------------------------------------------------
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட நம் எழுத்த தள தோழமைகள். அய்யா அகன் அவர்கள், அய்யா திரு. காளியப்ப்பன் எசேக்கியல் அவர்கள்.
சியாமளா ராஜசேகர் அம்மா. சொ. சாந்தி அக்கா. தோழி சஹானா தாஸ், தோழி தாரகை, தோழர் சுந்தரேசன் புருசோத்தமன் தோழர் வினோத் கண்ணன் , தோழர் கனகரத்தினம், தோழர் ப்ரியன், தோழர் கவியரசன் புதுவிதி செய்வோம் , தோழர் சதுர்த்தி, தோழர் குமரேசன்

எழுத்து தள தோமைகளுடனான அன்பான சந்திப்பும்
புத்தக வெளியீட்டு விழாவில் வி.ஜ.பி களும் பேச்சுகளும்
இப்போது என் கையிலிருக்கும் ”உணர்வலைகள்” என்ற புத்தகமும்
அய்யா பழனிகுமார் அவர்களின் அன்பும்

என் உணர்வலையில் உற்சாக பெருவெள்ளத்தை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (14-Oct-14, 3:29 pm)
பார்வை : 1045

சிறந்த கட்டுரைகள்

மேலே