எனை மன்னிப்பாயா

இன்னும் சற்று நேரம்தான்
என் இறுதியாத்திரைக்கு

ஆம்!
கனவுகளும்
கற்பனைகளும் - என்
உள்ளமும்
உணர்ச்சிகளும்
உரிமையென்ற தீயில்கருகி
உயிர்விட போகிறது

உயிரின் ஓசை அடங்குமுன்
ஒற்றை கேள்வி கேட்க துடிக்கிறேன் - அது

எனை மன்னிப்பாயா?

மனம் கவர்ந்தவனே - எனை
மன்னிப்பாயா?

ஆயிரம் காரணங்கள்
அடுக்கினாலும்
குற்றமற்றவளாக இயலாது
இருந்தும் கேட்கிறேன் - எனை
மன்னிப்பாயா?

இதோ!
நாம் ஓடித்திரிந்த
ஒற்றையடி பாதைக்கும்
பாடிக்களித்த புல்வெளிக்கும்
கற்றை அன்பினில் - உன்
காதலை சொன்ன
கரும்பு தோப்புக்கும்
கடைசியாக பேசிய
குளத்தங்கரைக்கும்
விடை சொல்லிவிட்டேன்

கால்பவுன் என்றாலும்
கைகாசில் செய்வேனென்று
காத்திருக்க சொல்லிவிட்டு
கடல் கடந்துபோன உனை
காணவந்து கண்ணீரோடு
விடைகொடுத்த நாள் இன்னும்
விழியோடு கலந்திருக்க
வழிமாறிப் போகின்றேன்

எனை மன்னிப்பாயா?

என் மீதான
உன் நம்பிக்கையை
அக்னி குண்டத்தில் எரித்து
அருந்ததிபார்த்து
வேறொருவன் மனையாளானேன்

எனை மன்னிப்பாயா?

வருகைக்காக காத்திருந்தேன்
வாசலை தினம் பார்த்திருந்தேன்
வறுமை எனை சூழ்ந்திடவே
வாசலுக்கே வந்துவிட்டேன்

உதவிய கரமொன்று
உடையவளாக்க நினைக்க
உடன்பிறப்புகளேனும் வாழட்டுமென்று
ஒப்புக்கொண்டு ஊர்வலம் போகிறேன்

எனை மன்னிப்பாயா?

உனக்காகவே சேர்த்துவைத்திருந்த
என் வெட்கங்களையும்
முத்தங்களையும்
அந்திநேரத்து அந்தரங்க ஆசைகளையும்
வேறொருவனுக்கு விருந்தளிக்க துணிந்து
விலைமகளாகிப் போனேன்

எனை மன்னிப்பாயா?

எழுதியவர் : யாழ்மொழி (15-Oct-14, 4:19 pm)
Tanglish : yenai mannippaayaa
பார்வை : 557

மேலே