ஹோட்டல் கோல்டன் பாலஸ்-3 கிரைம் தொடர்

முன்கதைச் சுருக்கம்
.........................................
நான், சூரிய ப்ரகாஷ். ஹோட்டல் கோல்டன் பாலஸின் தலைமை செஃப் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர். என் முதலாளியின் வருங்கால மாப்பிள்ளை நவீனுக்காக காத்திருக்கிறேன். முதலாளி மகள் பார்வதிக்கு சமையல் டியூசன் எடுக்கவும் ஒத்துக்கொண்டேன்.
................................................................................................................................................................................................

ஒரு டைரியிலிருந்து சங்கேத எழுத்துக்களில்..
சிவப்புன்னா சிவப்பு... ராத்திரி கூட டாலடிக்குது. ஜாவா கத்துக்கறாளா... நாமளும் வந்துட்டோமில்ல.. “அந்த போட்டோவை” காட்னேன். பாவி அயோக்யா எப்படி எடுத்தேன்னா. ரெண்டு நைட் பேரம்.. மடங்கினா..
க்வீன் செக்! ஆட்டம் தொடரும்...

...................................................................................................................................................................................................

அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஆறு மணிக்கு வெள்ளை வெளேர் என்ற செஃப் டிரெஸ்ஸில் ஓட்டமும் நடையுமாக ஒரு பெண்மணி வந்தார். வெளேர் முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். செம்பட்டை தலை முடி; சரிந்த வயிறு.

அதிகமாக சக்தியை விரயம் செய்யாமல் எனக்கு மாத்திரம் கேட்கிற மாதிரி பேசினார்; “ஐ யம் பலீனா. ”
அவரை வரவேற்று உபசரித்து அவருக்கான அறையைக் காட்டினேன். அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கான வேலைச் சுமையில் பாதியை பங்கிட்டுக் கொண்டார்!

அன்று காலை எங்கள் மதிப்புமிக்க விருந்தினர் நவீன் வந்தார். பூங்கொத்து கொடுத்து வரவேற்றேன். ஐந்தேமுக்காலடி உயரம், கோதுமை நிறம், பேசிக் கொண்டிருக்கும்போதே நாலாபுறம் அலையும் பூனைக் கண்கள்..

“எங்கள் பாஸ் உங்களை நாளை மாலை சந்திப்பதாகச் சொன்னார்” என்று தெரிவித்தேன்.

“ஓ நோ ஃபார்மாலிடீஸ்” என்றார் சிரித்தபடி. “கான்ட்ராக்ட்காக வந்தேன். அது கிடைச்சுட்டா போதும்.. ஆமா உங்க பாஸ் யாருக்கு வேணும்? ”

“பார்வதி மேடம் பங்களாவுல ரெஸ்ட் எடுத்துட்டிருப்பாங்க”

“கான்ட்ராக்ட் முடியட்டும். பார்வதிய தூக்கிட்டே போயிடறேன்.”

ஜாலிப் பேர்வழிதான். அவரோடு லிஃப்ட்டுக்குள் நுழைந்தேன். மூன்றாம் தளத்தில் தனியறை அவருடையது. அறைக்குள் நுழைந்தோம். எல்லா விஐபி அறையிலும் உள்ளதை போல் இந்த அறையிலும் கவுன் அணிந்த சிறுமி கையில் கருநீலப் பூங்கொத்தோடு நிற்பதைப் போல் காகிதக் கூழ் பொம்மை வைத்திருந்தோம். நவீன் அறைக்குள் வந்த அடுத்த நொடி எதனாலோ தாக்கப்பட்டவர் போல முகம் மாறி, கை கால் சில்லிட மயங்கி விழுந்தார்!

ஹோட்டல் நிர்வாகம் மொத்தமும் என்னவோ ஏதோ என்று பதறியது. வெறும் அதிர்ச்சிதான் என்றார் டாக்டர். மயக்கம் தெளிந்த நவீன் எங்களை வெளியே அனுப்பி விட்டு யாருடனோ ஃபோனில் நிறைய நேரம் பேசினார். பிறகு சகஜ நிலைக்கு வந்தார்!

பலீனா மேடம் உபயத்தால் மதியம் மூன்றிலிருந்து மாலை ஏழு மணி வரை ஃப்ரீ டைம் கிடைத்தது. ஐந்து மணிக்கு பங்களாவுக்குப் புறப்பட்டேன், பார்வதிக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமே.

வெண்ணிறப் பெயிண்டிங்கில் பங்களா. இந்த வீட்டை பார்க்கிறவர்கள் தவறாமல் கேட்கிற கேள்வி, “வால்பட்டி முடிச்சிடீங்க, எப்ப பெயிண்ட் அடிக்கப் போறீங்க?” என்பதுதான். வரவேற்பறையின் இடப்புறம் சமையலறை; சமையலறையை ஒட்டி ஆரண்யா மேடத்தின் அறை. வாசலுக்குப் பக்கத்தில் சின்ன ஆபிஸ் ரூம். ஆபிஸ் ரூமுக்குள் நுழைந்தால் வரவேற்பறைக்கு இணையாக உள்ள மீட்டிங் ஹாலில் முடியும். குடும்பத்துக்கு ஏற்றாற் போல் சிம்பிளான மாடுலார் கிச்சன். ஹோட்டலின் நவீன வசதிகள் இங்கு இல்லை.

நான் சமையலறையில் காத்திருந்த போது பார்வதி வந்தாள். மேக்கப் இல்லாத உருண்டை முகம், மெல்லிய புருவம், ஆடைக்கு ஏற்றாற் போல் வண்ண லென்சுகளை கண்களில் அணிந்திருந்தாள்.

பொதுவாக என்னிடம் பயில வரும் மாணவிகள் மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் இருப்பார்கள். கல்யாண ஏக்கம், கனவு, புதிய இடத்தில் வாழ்க்கையைப் பற்றிய எதிர்பார்ப்பு, படபடப்பு, பெற்றோரைப் பிரிகிற சோகம்- எல்லாம் சேர்ந்த உணர்ச்சிக் கலவை நான் வைக்கிற குழம்பிலுள்ள பொருள்களைப் போலவே கொதித்துக் கொண்டிருக்கும். சூப் கூட்டி அடுப்பில் ஏற்றிய பிறகு காஸ் ஸ்டவ்வை ’ஆன்’ செய்ய மறந்து “கொதி வரலையே மாஸ்டர்” என்று கையைப் பிசைவார்கள். மெதுவாகப் பட்டும் படாமலும் தோளில் தட்டி, காஸ் ஸ்டவ்வை சுட்டிக் காட்டினால் கன்னத்தில் கனிகிற சிவப்பு இந்த உலகத்தில் வைத்து எந்த மலருக்கும் இல்லை!

ஆனால் பார்வதியிடம் கலகலப்போ, எதிர்பார்ப்போ இல்லை. நான் சொல்வதை கவனமாகக் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டாள். இருப்பினும் ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். இன்னொரு விபரீதத்தைக் கவனித்தேன். பொதுவாகப் பெண்கள் கத்தியால் காய் வெட்டும்போது கை பக்கவாட்டில் போகும். நான் கவனிக்காத மாதிரி கவனித்தபோது இவள் கை காது வரை போய் நேராக ஒரே குத்தாக இறங்கியது காரட்டில்!

தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (15-Oct-14, 9:09 pm)
பார்வை : 146

மேலே