கனவுத் தேடல் - ரகு
ஜனனக்கோடுகள் வானவில்லாகும்
ஜன்னலின் வழியே கிரகங்கள் தெரியும்
ஒரு நாடு ஒரு மொழியில் உலகம் இயங்கும்
ஓர்க்கடவுள் பகுத்தறிவு உலகு வணங்கும்
யாது கேட்பினும் கிடைக்கும்
இரவில் சூரியன் உதிக்கும்
வைரக்கல்லில் வீடுகள் இருக்கும்
நட்சத்திரங்கள் விளக்கென ஒளிரும்
விட்டில் பூச்சிகளும் நாட்டை ஆளும்
வேர்களுக்குள்ளும் பூக்கள் ஜனிக்கும்
நகரங்கள் கிராமங்களாய்ப் பிரிக்கப்படும்
விவசாய பூமிகள் ஒதுக்கப்படும்
மானுடப்பார்வைக்கு மழைப் பெய்யும்
ராணுவ தளங்கள் பூங்காக்களாகும்
சிறைச்சாலைக்குள் கல்விக்கூடங்கள்
சிறகுகள் விரிய விசால மேகங்கள்
பூமியெங்கும் புன்னகைச் சத்தங்கள்
புன்னகைக்குள் வெற்றியின் முத்தங்கள்
இப்படியாக நீள்கிறது -ஒருப்
பிறவிக் குருடனின் கனவுத் தேடல்கள்...!