தமிழ்த் திருப்புகழ்

அன்னை எனமுன்னம் உதித்தவள்
என்னை ஒருபிள்ளை எனப்பெறும்
கன்னி இவள்இன்னும் அதிசயம் -புரிவாளே
எண்ணங் களில்நின்று நிலைப்பவள்
வண்ணங் களில்வென்று திளைப்பவள்
சின்னஞ் சிறுசிட்டு மொழியிலும் -திகழ்வாளே
சங்கம் அமைத்துன்னை வளர்த்திட
தங்கத் தமிழ்நாளும் ஒளிர்ந்திட
எங்கட் கருள்செய்து மகிழ்ந்திடு -தமிழ்த்தாயே
அன்பி லுனைப்போற்றி வணங்கிட
இன்பந் தருகவியால் புகழ்ந்திட
கன்னல் மொழியாளே அருளிட -வரவேணும்
சித்தம் தெளிவிக்கும் தமிழுனை
நித்தம் புகழ்பித்தன் சிறியனை
சத்தம் தரும்புத்தம் புதுகவி- பொருளோடு
அள்ளித் தரஅன்பைத் தருவையே
உள்ளத் திருஉண்மைத் திருநிதி
கள்ளத் தனமற்றுத் திகழ்ந்திடும் -பெரியோளே
சந்தத் திருப்புகழும் படித்திட
சொந்தமென வந்து இரசித்திட
இந்தத் தமிழ்முந்தும் தளத்தினில் –பதிவாகும்
சித்த முடன்வந்து களித்திடு
இத்த ரணிமீதில் கலந்திடு
புத்தி தெளிவித்தே சிறந்திட -துணையாவாய் !

கல்லைக் கனியாக்குந் திறமுடன்
சொல்லைக் கவியாக்கிப் பொலிவுடன்
வெல்லு மிதுவேநற் தருணமாய்- உரைப்பாயே !
பட்டத் துயர்போதும் எமக்குமே
தட்டுத் தடுமாறா துலகினில்
எட்டுத் திசையுந்தன் அருள்மழை -பொழிவாயே !
சொல்லில் வரும்நல்லப் பொருளதாய்
அல்லும் பகல்உன்னை நெருங்கவே
நல்லக் கறைகொண்டு தினந்தினம் -தரும்பாட்டில்
சந்திப் பிழையின்றிப் பொருளுடன்
தந்துப் பயன்பெற்று மகிழ்ந்திட
முந்துத் தமிழ்மாலை தொடுத்திட- வருவாயே !
கந்தக் கடவுற்றன் கருணையில்
சிந்துக் கரைவிட்டு உலகினை
உந்தித் தொடுமுன்னைப் புகழ்ந்திட-வருவோமே
சிந்தித் திடப்பந்தித் தருமுனை
நிந்திப் பவர்மந்திக் குழுவென
விந்தைத் தரும்நந்திப் பிளைஎன- இகழ்வோமே
சொந்த மெனவந்த மொழியுனை
எந்த நுளம்தந்து வளர்த்தினி
சிந்தும் மழையீந்த தளிரென -வளர்ப்போமே
இந்த விருவன்னை மகன்தனை
பிந்தி இருவண்ண மகற்றியே
முந்தித் தொழசந்தம் அருளிடு -தமிழ்த்தாயே!.

எழுதியவர் : அபி ,ஷாமளா ராஜசேகர் (18-Oct-14, 11:57 pm)
பார்வை : 174

மேலே