பட்டாசு பேசுகிறது

பட்டாசு பேசுகிறது...
===================

எங்களின் பிறப்பிடம் சிவகாசி
இருப்பிடம் எங்கெங்கெல்லாமோ

வெடி மருந்து பொருட்கள்
எங்களின் உயிரியக்கிகள்
ஒ(ளி) லியுடன் துள்ளுகிறோம்...


கொஞ்சமும் அதிகமுமாய்
வண்ண வண்ண தாள்களில்
உயிரினை மறைத்த தோல்களாய்...

குண்டாய், தட்டையாய்,
குச்சியாய். கயிறாய்
இப்படி எப்படி எல்லாமோ
எங்களின் வடிவங்கள்....

பெயர் சூட்டுகிறார்கள்
மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வானம்
ராக்கெட்டு. பாம்பு, சாட்டை வெடிகள்
இப்படி எப்படி எல்லாமோ....

சிறார் முதியவர் என்றில்லாமல்
எவருமாய் எங்களை பிரசவப்பதில்...
கூலித் தொழிலாளிகளாய்...

சவமாய் தான் பிறக்கிறோம்
விலை கொடுப்பவர்கள் உயிரூட்டுகிறார்கள்

மனிதர்கள் இறந்த பின்பு
கொல்லி வைப்புகள்
எங்களை உயிரூட்டுதற்காய்...

உயிரூட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே
காலாவதியாகிறோம்
அற்ப பிறப்புகளாய்...

உங்களின் காசு கரியாதலில்
நாங்களும்தான் கரியாகிறோம்
எரிதல் நாங்கள் மட்டுமல்ல
உங்களின் உழைப்பும்தான்...

தீபாவளித் திருநாளினில்
எங்களுக்கு விழா...
வாசல்தோறும் வீடுதோறும்
எங்களின் துள்ளல்கள்
கூப்பாடுகள்... சப்தங்கள்...

நெருப்புப் பூக்களாய்
மலர்ந்து ஒளி பரப்பி
வானம் பறந்து, பூமியில் சிதறி
எங்களின் மகிழ்ச்சியோடு
உங்களின் மகிழ்சிக் கலவைகள்...

கால் கை என்று அங்கங்கே
மனித உடலை பழுதாக்குகிறோம்
உங்களின் கவனக் குறைவுகளால்...

நரகாசுரன் அழிந்த நாளினில்
நாங்களும்தான் அழிக்கப் படுகிறோம்
உங்களின் நிதிகளை அழித்துக் கொண்டு...

எங்களின் ஜனனத்தை
குறைக்க வேண்டுகிறோம்
மாசும் தூசும்
மண்டுகிறது எங்களால்
நோய்க்கு விதை தூவி....

ஓசோனை துளைக்கிறோம்
மழையோ ஒளிந்து கொண்டு
வறட்சிக்கு வித்தாய் நாங்கள்..

உழைத்த காசினை
வீணாக்காதீர் எங்களுக்காய் ..

செலவிடுங்கள் உணவிற்கும்
உடைகளுக்குமாய்...
உதவிடுங்கள் திருநாளில்
ஏழைகளுக்குமாய் `

தீபாவளி இனிப்புகளுடனும்
புத்தாடைகளுடனும் இருக்கட்டும்
விடைகொடுங்கள் எங்களுக்கு
அமையட்டும் அமைதியான தீபாவளி...

தீபாவளித் திருநாள்
வாழ்த்துக்களுடன்,
பட்டாசு.

எழுதியவர் : சொ.சாந்தி (19-Oct-14, 8:20 pm)
பார்வை : 438

மேலே